Loksabha election 2024 நீலகிரி தொகுதியில் கள நிலவரம் எப்படி? அதிமுக – திமுக நேரடி போட்டி!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளதுடன், வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளன.
அதன்படி, திமுக 21 மக்களவை தொகுதிகளிலும், அதிமுக 32 மக்களவை தொகுதிகளிலும் நேரடியாக களம் காண்கிறது. இதில், 18 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன. அந்த வகையில், நீலகிரி தொகுதியில் திமுக சார்பாக அந்த தொகுதியின் சிட்டிங் எம்.பி. ஆ.ராசாவும், அதிமுக சார்பாக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி தொகுதி கள நிலவரம் எப்படி?
நீலகிரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை, மலைப்பகுதியைச் சேர்ந்த தொகுதிகளும் சமவெளிப் பகுதிகளை சேர்ந்த தொகுதிகளும் உள்ளன. நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று தொகுதிகள் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய சமவெளி மாவட்டங்களைச் சேர்ந்தவை. இந்த மூன்று தொகுதிகளில் 60 சதவீத வாக்காளர்கள் உள்ளதால், வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக சமவெளிப் பகுதிகளே உள்ளன.
படுகர்கள், பழங்குடியினர், பட்டியலின சமூகத்தினர், கவுண்டர்கள், ஒக்கிலிகர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர் உள்ளனர். இதில் மலை மாவட்டத்தில் படுகர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளனர். சமவெளிப் பகுதி மாவட்டங்களில் பட்டியலின சமூகத்தினர், கவுண்டர்கள் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நீலகிரி தொகுதியில், 7 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் ஆர்.பிரபு மட்டும் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். 1967இல் சுதந்திரா கட்சி, 1971 மற்றும் 2009, 2019 ஆகிய ஆண்டுகளில் திமுக, 1977 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் அதிமுக கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. பாஜக இரு முறை வெற்றி பெற்றுள்ளது.
டந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் ஆ.ராசா வெற்றி பெற்றிருந்தார். அந்த தேர்தலில் ஆ.ராசா 547,832 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 54.36 சதவீத வாக்குகளை அவர் பெற்றிருந்தார். 3,42,009 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த அதிமுகவின் தியாகராஜன், 33.94 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ராஜேந்திரன் 4.09 சதவீத வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். அவர் பெற்ற வாக்குகள் 41,169. சுயேச்சை வேட்பாளரும் 4.01 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார்.
இந்த முறை மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அக்கட்சிக்கு கோவை பெல்ட்டில் கணிசமாக வாக்கு வங்கி உள்ளது. அதுதவிர, நீலகிரி தொகுதியில் பல முறை வெற்றி பெற்ற காங்கிரஸும் திமுக கூட்டணியில் உள்ளது. இதுபோன்ற விஷயங்கள் திமுகவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், தொகுதியில் கட்சிக்காரர்களின் ஆதரவு இல்லை என்று பலமுறை தனபாலே வெளிப்படையாக வேதனை தெரிவித்துள்ளார். எனவே, அவரது மகனுக்கு நீலகிரி தொகுதி அதிமுகவினர் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என தெரியவில்லை.