தூங்கும் நேரத்தை மாற்றி அமைத்த இந்திய ரயில்வே.. ஏசி, ஸ்லீப்பர் பெட்டிகளில் இனி இதுதான் ரூல்ஸ்!
பெரும்பாலானோர் ரயிலில் பயணம் செய்கிறார்கள். சில நேரங்களில் தனியாக, சில சமயம் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் குழுவாக செல்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஃபன்னாக நேரத்தை செலவழிப்பார்கள். ஆனால் உங்களின் வேடிக்கைக்கும் உறக்கத்திற்கும் ரயில்வே ஒரு விதியை வகுத்துள்ளது. இந்த விதிகளை மீறும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்த விதிகளைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
ரயில்வேயில் குறைந்த இருக்கைகள் இருப்பதால், பல நேரங்களில் ரயிலில் நம் விருப்பப்படி பெர்த் கூட கிடைப்பதில்லை. நடு பெர்த்தில் தூங்குவது தொடர்பாக சில சமயங்களில் தகராறு ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், பயணத்தின் போது எந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
இந்திய இரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். எனவே, ஒவ்வொரு பயணிகளும் நல்ல பயண அனுபவத்தைப் பெறுவதையும், ரயில் நெட்வொர்க் நன்றாகச் செயல்படுவதையும் உறுதிப்படுத்த இந்த விதிகள் உள்ளன. இதன் கீழ் இரவில் சத்தமாக பேசுவது, சத்தம் போடுவது, பாடல்கள் கேட்பது என பயணிகளுக்கு தொந்தரவு தரக்கூடாது. புதிய விதிகளை மீறும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலில் பயணிகள் இரவு பயணத்தின் போது அதிகபட்சம் 9 மணி நேரம் தூங்கலாம். ஆனால் தற்போது இந்த நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஏசி பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர்களில் பயணிகள் தூங்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ரயில்வேயில் மாற்றப்பட்ட புதிய விதிகளின்படி இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும். அதாவது, இப்போது தூங்கும் நேரம் 8 மணிநேரமாக குறைந்துள்ளது. இந்த மாற்றம் தூங்கும் வசதி கொண்ட அனைத்து ரயில்களுக்கும் பொருந்தும்.
நீங்களும் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்த புதிய தூக்க நேரத்தை பின்பற்ற வேண்டும். இது தவிர, ரயிலில் பயணம் செய்யும் போது, மேல் அல்லது நடு பெர்த்தில் உள்ள பயணிகள் இரவில் தாமதமாக கீழ் பெர்த்தில் அமர்ந்திருந்தால், அங்குள்ளவர்களுக்கு தூங்குவதில் சிக்கல் ஏற்படலாம். விதிகளின்படி, இந்த பயணிகளை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தங்களுடைய பெர்த்துக்குச் செல்லச் சொல்லலாம். இதேபோல், நடுத்தர பெர்த்தில் பயணம் செய்பவர் பகலில் தனது பெர்த்தை ஓபன் செய்தால், கீழ் பெர்த்தில் இருப்பவர் அதை மறுக்கலாம்.
ரயில்வேயின் புதிய இரவு விதிகள் :
எந்தவொரு பயணியும் தனது இருக்கை அல்லது பெட்டியில் இருந்தவாறு மொபைலில் சத்தமாக பேச முடியாது. இயர்போன் இல்லாமல் எந்தப் பயணியும் இசையைக் கேட்க முடியாது. இரவு 10 மணிக்குப் பிறகு, இரவு விளக்குகளைத் தவிர, மற்ற விளக்குகளை எரிய அனுமதிக்கக் கூடாது. ரயில் சேவைகளில் ஆன்லைன் உணவு இரவு 10 மணிக்கு மேல் வழங்கப்படாது.
இருப்பினும், இரவிலும் ரயிலில் இ-கேட்டரிங் சேவை மூலம் உங்களின் உணவு அல்லது தின்பண்டங்களை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம். மேலும், புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் பிற செயல்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது ரயில் பெட்டிகளில் அனுமதிக்கப்படாது. இது அனைத்தும் இந்திய ரயில்வேயின் விதிகளுக்கு எதிரானது. மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.