சுவையான தேங்காய் பால் அரிசி பாயாசம் எப்படி செய்வது.?
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று பாயாசம். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம், அரிசி பாயசம் எனப் பல வகைகள் உண்டு. இதை சுபநிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் இனிப்பு உணவாகும்.
அந்தவகையில் விரைவாக எளிய செய்முறையில் சுவையான தேங்காய் பால் அரிசி பாயாசம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
அரிசி – 1/2 கப்
ஜவ்வரிசி – 1\4 கப்
வெல்லம் – 1/2 கப்
தேங்காய் துண்டு – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் – 1/2 கப்
பால் – 1/2 லிட்டர்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 8
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து மிதமான தீயில் பாகு தயாரிக்கவும்.
வெல்லம் நன்றாக கரைந்து பாகு தயாரானவுடன் அதை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் துருவிய தேங்காயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து அதிலிருந்து முதல் மற்றும் இரண்டாம் பாலை எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் வடிகட்டிய வெல்ல பாகை சேர்த்து கொள்ளவும்.
பிறகு அதில் ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
இது ஒரு கொதி வந்தவுடன் அலசிய அரிசி மற்றும் இரண்டாவது தேங்காய்ப்பால் சேர்த்து கலந்துவிடவும்.
பின்னர் இதனுடன் பசும்பால் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து கலந்து குறைவான தீயில் 5 முதல் 8 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
பிறகு அதில் எடுத்து வைத்துள்ள முதல் தேங்காய் பாலை சேர்த்து நன்கு கலந்துவிட்டுக்கொள்ளவும்.
அடுத்து மற்றொரு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடாக்கி அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் உலர் திராட்சை மற்றும் முந்திரி பருப்புகளை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
வறுத்த அனைத்தையும் பாயாசத்துடன் சேர்த்து நன்றாக கலந்து உடனே அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவு தான் சுவையான தேங்காய் பால் அரிசி பாயாசம் ரெடி. இதை நீங்கள் அனைவருக்கும் சூடாகவோ அல்லது குளிராகவோ பரிமாறலாம்.