1981 ல் எம்ஜிஆர், சிவாஜி கணேசனின் வரிபாக்கி எவ்வளவு தெரியுமா?
கறுப்புப் பணத்தில் முன்னோக்கிச் செல்லும் துறைகளில் திரைத்துறை முக்கியமானது. ‘நான் கறுப்புப் பணம் வாங்கலைன்னு சொன்னா, அது பொய்யாயிடும். நான் கறுப்புப் பணம் வாங்கியிருக்கேன். ஆனா, இப்போது வாங்கிறதில்லை’ என்று ரஜினி முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
எம்ஜி ராமச்சந்திரன் உச்சத்தில் இருந்த போது, சம்பளத்தை குறைவாகக் காட்டி அவர் வரி ஏய்ப்பு செய்வதாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இதனை மையப்படுத்தி, கறுப்புப் பணம் என்ற படத்தை கண்ணதாசன் எடுத்தார். அத்துடன் எம்ஜி ராமச்சந்திரன், கண்ணதாசன் உறவில் விரிசல் விழுந்து, வாலியை கண்ணதாசனுக்குப் பதில் எம்ஜி ராமச்சந்திரன் பயன்படுத்த ஆரம்பித்தார்.
கறுப்புப் பணம் ஒருபக்கம் என்றால், கொடுக்கிற கணக்கிற்கு வரி கட்டாமல் ஏய்ப்பது இன்னொரு பிரச்சனை. தொழிலதிபர்கள் முதல் தொழிலாளிகள்வரை இதற்கு விதிவிலக்கல்ல. இன்றைய காலத்தில் ஒரேயொரு வித்தியாசம், பெருமுதலாளிகளின் வரிபாக்கி மட்டுமில்லை, வாங்கிய கடனையே வங்கிகள் தள்ளுபடி செய்கின்றன. இந்த சலுகை சாமானியர்களுக்கு இல்லை.
1982 ல் நடந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் வரிபாக்கி வைத்திருந்த வைத்திருந்த 60 திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியலை அரசு வெளியிட்டது. அதில் இந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி நடிகர்களும் இடம்பெற்றிருந்தனர். தமிழில் முதலிடத்தில் இருந்தார் எம்ஜி ராமச்சந்திரன். எம்.ஆர்.ராதா, சிவாஜி எல்லோரும் இந்தப் பட்டியலில் உண்டு.
1. எம்ஜி ராமச்சந்திரன் – 9.27 லட்சங்கள்
2. எம்.ஆர்.ராதா – 8.52 லட்சங்கள்
3. சாவித்ரி – 6.93 லட்சங்கள்
4. ஜமுனா – 5.79 லட்சங்கள்
5. வைஜெயந்திமாலா – 3.98 லட்சங்கள்
6. சிவாஜி கணேசன் – 3.78 லட்சங்கள்
இந்தப் பட்டியலை வெளியிட்ட போது எம்.ஆர்.ராதா மறைந்திருந்தார். 1982 ல் இந்தப் பட்டியலை வெளியிட்ட போது, ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,645 ரூபாய். அப்படியானால் இன்றைய தேதியில் இவர்கள் வைத்திருந்த வரிபாக்கியின் மதிப்பு எவ்வளவு என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
வரிபாக்கி பட்டியலில் அனைவரையும் பின்தள்ளி முதலிடத்தில் இருந்தவர், இன்றைய பாஜக எம்பியான நடிகை ஹேமாமாலினி. அவர் 18.11 லட்சங்கள் வரிபாக்கி வைத்திருந்தார்.
இன்றல்ல என்றுமே நடிகர்கள் வரிபாக்கி வைத்திருந்தார்கள் என்பதற்கு இந்தப் பட்டியலே சான்று.