கடந்த 3 ஆண்டில் ரயில்வே நிர்வாகத்துக்கு ₹1,230 கோடி வருவாய்..!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் விவேக் பாண்டே என்பவர், இந்திய ரயில்வேயிடம் சில தகவல்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்திற்கு ரயில்வே நிர்வாகம் அளித்த பதிலில், ‘ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து, காத்திருப்போர் பட்டியிலில் உள்ளவர்களின் ரத்தான டிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்து தகவல் கோரப்பட்டது. அந்த வகையில் 2021ம் ஆண்டில், 2.53 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. இதன்மூலம் ரயில்வேக்கு ₹242.68 கோடி வருவாய் கிடைத்தது. 2022ல் 4.6 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம் ₹439.16 கோடி வருவாய் கிடைத்தது.

2023ல் 5.26 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் ₹505 கோடி பணம் கிடைத்தது. 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 45.86 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் ரயில்வேக்கு ₹43 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த 2021 முதல் 2024ம் ஆண்டு (ஜனவரி வரை) வரை ரத்து செய்யப்பட்ட காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகள் மூலம் ₹1,229.85 கோடி வருவாய் கிடைத்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் ஐஆர்சிடிசி மூலம் பதிவு செய்யப்பட்ட இ-டிக்கெட்டுகள் ரத்துசெய்யப்பட்டால் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நெட் பேங்கிங் அல்லது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால், குளிரூட்டப்பட்ட வகுப்புகளுக்கு சேவை கட்டணம் ₹30 வசூலிக்கப்படுகிறது. யுபிஐ மூலம் முன்பதிவு செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ₹20 என்ற அளவிலும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு, ஒரு டிக்கெட்டுக்கு ₹15 (நெட் பேங்கிங் அல்லது கார்டு) என்ற அளவிலும், யுபிஐ மூலம் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுக்கு ₹10 வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *