இனி சொந்த கார்களை இதற்கு பயன்படுத்தக் கூடாது..!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு இது தொடர்பான வழிகாட்டுதல்கள் அனைத்து அரசு துறை ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் அவர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி சொந்த பயன்பாட்டு கார்களை வாடகை வாகனமாக பயன்படுத்தக் கூடாது என்றும், தேர்தல் நேரத்தில் சிலர் இவ்வாறு பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகார்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது.