விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு..!
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க போட்டியிடுகிறது. இந்தநிலையில், மத்திய சென்னை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி ஆகிய 5 தொகுதிகளை தே.மு.தி.க. வுக்கு அ.தி.மு.க ஒதுக்கி உள்ளது.
தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல் நாளான நேற்று முன்தினம் விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
இந்நிலையில் தே.மு.தி.க சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதிஷ் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். தே.மு.தி.க சார்பில் இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.