மக்களே உஷார்..! தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை நோய்..!
ஆண்டுதோறும் கோடை காலம் தொடங்கியது முதல் அம்மை நோய் தாக்கத்தின் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதும் அதிகமாக தொடங்கும். தற்போது தமிழகத்தில் வழக்கத்தை காட்டிலும் மார்ச் மாதத்திலேயே அதிக வெப்பநிலை நிலவி வருவதால் தட்டம்மை, சின்னம்மை போன்ற நோய்கள் தாக்க தொடங்கியுள்ளது. முகம் மற்றும் காது பக்கத்தின் பின்பகுதிகளில் வேர்க்குரு போன்ற அறிகுறிகளும் சிவப்பு புள்ளிகளாக உடல் முழுவதும் பரவி காணப்படும். கண்கள் சிவந்து வீக்கம் ஏற்படும். மேலும் சின்னமை நோய் காரணமாக உடலில் நீர் கட்டிகள் போன்ற சிவப்பு சிறிய கொப்புளங்கள் தோன்றும்.
குழந்தைகள் மற்றும் வயது முதியவர்களை எளிதில் தாக்க வாய்ப்புகள் உள்ளதால், போதுமான அளவிற்கு நீர், இளநீர்,மோர், பழச்சாறுகள் போன்றவற்றை குடிக்கவும், பழங்கள் அதிக அளவில் உண்ணவும் சுகாதாரத் துறையானது அறிவுறுத்தி உள்ளது. மேலும் வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் அதிக வெயில் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், தேவையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழகத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெப்ப நோய்களை வெல்லும் வழிகள்
வெயில் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து நான்கு லிட்டர்வரை தண்ணீர் குடிப்பது அவசியம். காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்கள், குளிர்பானங்களைக் குடிக்க வேண்டாம். காரணம், குளிர்பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக்குழாய்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.
இதற்குப் பதிலாக இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன.
இதனால், உடலின் நீரிழப்பால் ஏற்படுகிற பாதிப்புகளை உடனடியாகக் குறைகின்றன. எலுமிச்சை சாற்றில் சமையல் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்.
பழங்களை அதிகப்படுத்துங்கள்!
தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலா பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடி உட்கொள்ளுங்கள். இவற்றில் பொட்டாசியம் தாது அதிகமுள்ளது. கோடை வெப்பத்தால் வியர்வையில் பொட்டாசியம் வெளியேறிவிடும். இதனால் உடல் களைப்படைந்து, தசைகள் இழுத்துக்கொள்ளும். அப்போது, இப்பழங்களில் உள்ள பொட்டாசியம் அந்த இழப்பை ஈடுகட்டும். கோடையில் வெப்பத் தளர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கப் பழங்களைச் சாப்பிடுவதுதான் சிறந்த வழி.