பித்தப்பை. மெத்தனம் வேண்டாம்!
இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடலுறுப்புகள் மீது கவனம் செலுத்துகிறோம். ஆனால் அக்கறை செலுத்தாத முக்கிய உடலுறுப்புகளுள் பித்தப்பை குறிப்பிடத்தக்கது. ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் மட்டுமே அதைப் பற்றி நாம் கவலைப்படுகிறோம். வயிற்றின் வலது மேற்பகுதியில் பித்தப்பை அமைந்துள்ளது. கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தநீரைச் சேமிப்பதுடன், உண்ணும் போது அதைப் பித்த நாளம் வழியே சிறு குடலுக்கு அனுப்புவதே பித்தப்பையின் முக்கியப் பணியாகும்.
நமது உணவில் கலந்துள்ள கொழுப்பை உடைத்துச் ஜீரணிக்க பித்தநீர் உதவுகிறது. உணவில் கொழுப்புச் சத்து இருப்பின், பித்தநீரை சிறுகுடலுக்குள் செலுத்தி ஓரளவு ஜீரணமான உணவுடன் கலந்து கொழுப்பை உடைக்கிறது. சிறுகுடல் இப்பணியைச் செய்து கொண்டிருக்கும் போது, சுரக்கப்பட்ட பித்தநீர் மீண்டும் பித்தநீர்ப்பைக்குள் சென்று தேவைப்படும் வரை சேமிப்பிலிருக்கும்.
பித்தப்பை பிரச்னை எப்போது ஏற்படுகிறது?
கல்லீரலிலிருந்து பித்தப்பைக்கும் பின்னர் அங்கிருந்து சிறுகுடலுக்கும் பித்தத்தை எடுத்துச் செல்லும் குழாயே பித்த நாளமாகும். அடைப்புக்கு முக்கியக் காரணமாக விளங்குவது கல் ஆகும். இது பித்தம், கொழுப்பு மற்றும் ஃபாஸ்ஃபரஸ் கொழுப்புகளின் செறிவில் ஏற்படும் மாற்றம் காரணமாக உருவாகிறது. சில தருணங்களில் கற்கள் இன்றியும், சிறுகுடல் தொடங்கி பித்தப்பை வரையிலும் வலி அதிகரித்துக் கடுமையான பித்தப்பை அழற்சிக்கு வழிவகுக்கும்.
பித்தப்பை பிரச்னையின் சமிஞைகளும், நோய்க்குறிகளும்
பித்தப்பை பிரச்சினையின் முக்கிய நோய்க்குறி வயிற்றுவலிதான். பித்தம் கடினமாகிப் பித்தக் கற்களாக உருமாறிப் பாதையை அடைப்பதால், விலா எலும்புகளுக்கு கீழே மிதமான மற்றும் கடுமையான வலி ஏற்படும். ஆரம்பத்தில் 30 நிமிடம் தொடங்கி பல மணி நேரம் நீடிக்கும் இந்த வலி பின்னர் தொடர் வலியாக மோசமடையும்.
வயிற்றின் வலது பக்க வலியுடன் கீழ்க்காணும் நோய்க்குறிகளும் தென்படும். அவை பின்வருமாறு:
* பசியின்மை
* களைப்பு
* எடை குறைதல்
* கண்களும், சருமமும் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை) மற்றும் கருநிறச் சிறுநீர்
* தட்பவெப்ப ஏற்ற இறக்கம்
* அரிப்பு
* இரவு நேரத்தில் வியர்த்தல்
* வெளிர் நிற மலம்
* வயிற்றின் வலது மேற்பக்கம் அவ்வப்போது ஏற்படும் வலி
பித்தப்பை புற்றுநோய் உள்ளிட்ட அரிதான காரணங்களால் பித்தநீர் நாளங்கள் குறுகவோ, அடைத்துக் கொள்ளவோ சாத்தியங்கள் உண்டு. இப்புற்றுநோய் எந்த வகையான நோய்க்குறிகளையும் தொடக்கத்தில் காட்டாமல், கடைசி கட்டத்தில் மட்டுமே தெரிய வரும். பித்தப்பைப் பிரச்சினைகளுடன் இக்குறிக்கள் கலந்துவிடுவதால், இதனைத் தனியாக அடையாளம் காண்பது இயலாமல் போகிறது. புற்றுநோய் அல்லாத சவ்வுக் கட்டியின் வளர்ச்சி ஏற்படலாம். கண்களுக்குப் புலப்படும் மற்றும் உணரக்கூடிய அறிகுறிகளைச் சவ்வுக் கட்டி ஏற்படுத்தாது.
பித்தப்பை பிரச்னைகள்
பித்தப்பை கல் தோன்றுவதற்கான அடிப்படை தெளிவாகத் தெரிவதில்லை. இருப்பினும் அது உருவாவதை அதிகரிக்கும் அபாயங்களுக்குப் பல காரணங்கள் உள்ளன. சில அபாயங்கள் பித்தப்பை புற்றுநோயுடன் ஒத்துப் போகின்றன. அவை பின்வருமாறு:
* அதீத உடல் இடை
* வயது மூப்பு
* அதிக கொழுப்பு
* கருத்தடை மாத்திரைகள் / ஈஸ்ட்ரோஜன் மாத்திரைகளை உட்கொள்ளுதல்
* உடல் எடை வேகமாகக் குறைதல்
* நீரிழிவு
* பாக்டீரியா தொற்று
* குடும்ப உறுப்பினர்களுக்கு பித்தக்கற்கள் இருத்தல்
சில பித்தப்பை புற்றுநோய் ஆபத்து காரணிகளுடன் ஒத்துப்போகின்றன. நீரிழிவு நோயுடன் இப்பிரச்சனை கண்டறியப்பட்டால், சரியாக மதிப்பீடு செய்வது முக்கியம் அல்லது அது காங்கரீன் அல்லது பஸ்டுலர் பித்தப்பைக்கு வழிவகுக்கும்
பித்தப்பை பிரச்னைகளைக் கண்டறிதல்
உங்கள் குடும்ப மருத்துவர் அறிகுறிகளின் அடிப்படையில் அவற்றை ஆய்வு செய்து பித்தப்பை பிரச்சினைகளைக் கண்டறிவதுடன், உடலைப் பரிசோதித்தும் பிரச்சினைகளை தீவிரத்தை முடிவு செய்வார். பித்தக்கல் இருப்பதை மருத்துவர் சந்தேகித்தால், கிழ்க்காணும் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்: –
* பிலிரூபின் அளவு, இரத்தக் கழிவுப் பொருள், கணையம் அல்லது கல்லீரல் நொதிய அளவுகள் மற்றும் / அல்லது தொற்று சமிஞைகள்
* பித்தப்பை மற்றும் பித்தக்கல் உருவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைக் காண வயிறு அல்ட்ரா சவுண்ட்
* பித்தப்பை மற்றும் பித்தநீர் நாள உருவப்படங்களை உருவாக்கவும், பகுப்பாய்வு செய்யவும் வயிறு சிடி ஸ்கேன்
* பித்தநீர் நாளத்திற்கு சிறு நிழற்படக் கருவியைச் செலுத்திப் பித்தப் பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் கட்டமைப்பை விரிவாகப் பார்க்க எண்டோஸ்கோபிக் ரெட்ரோகிரேட் கோலேஜியோபேன்கிரியேடோகிராஃபி (இஆர்சிபி) பரிசோதனை
பித்தப்பை பிரச்னைகளுக்கான மருத்துவம் மற்றும் சிகிச்சைத் தீர்வுகள்:
பித்தப்பை கற்களை அகற்ற அறுவை சிகிச்சைக்கு மாற்றாகப் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். உர்சோடியோல் (ursodiol) உள்ளிட்ட சில மருந்துகள் பித்தக்கற்களில் உள்ள கொழுப்பைக் கரைக்கப் பயன்படுத்தப்படும். இச்சிகிச்சை மூலம் பிரச்சினையைத் தீர்க்கப் பல மாதங்கள் ஆகும் என்றாலும் 5மிமி அளவுக்கும் குறைந்த அளவிலான சிறு கற்கள் மட்டுமே கரையும்.
நோயைக் கண்டறிய மருத்துவர் இஆர்சிபி சிகிச்சை முறையைப் பரிந்துரைப்பார். பித்தக் கற்கள் காரணமாக பித்தநீர் நாளத்தில் அடைப்பு இருப்பின், சிகிச்சையை உடனடியாகத் தொடங்குவார். பித்தப்பையிலேயே பித்தக்கற்கள் காணப்படுவதுடன், தொடர் கடுமையான வலி இருந்தால், உடனடி அறுவை சிகிச்சை அவசியமாகும்
பித்தப்பை அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை முழுமையாக அகற்றப்படும். பித்தக் கற்கள் காரணமாகக் கடுமையான வலி ஏற்பட்டால் அறுவை சிகிச்சையே கடைசி தீர்வாகும். லேபரோஸ்கோபிக் என்னும் வயிற்றறை நுண்ணோக்கி அறுவை சிகிச்சையில் சிறு துளையிட்டுப் பித்தக் கற்கள் அகற்றப்படும். பித்தப்பை நோய் தீவிரமானால் திறந்தநிலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படும். பித்தப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டால் உங்கள் மருத்துவர் ரேடியேஷன் கதிர்வீச்சு அல்லது கீமோதெராபி உள்ளிட்ட கூடுதல் சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.
பித்தப்பை நோய்த் தடுப்பு முறைகள்:
வருமுன் காப்போம் என்னும் பழமொழிக்கேற்ப நோய்க்கான சிகிச்சையை விடவும், நோய்த் தடுப்பே சிறந்தது. பித்தப்பை பிரச்சினைகளைத் தடுக்கக் கீழ்க்காணும் வழிமுறைகள் உதவும்.
* தினசரி சமச்சீரான உணவை உண்ணுதல்
* பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் தரமற்ற உணவைத் தவிர்த்தல்
* சரியான பிஎம்ஐ பராமரித்தல்
* முறையான உடற்பயிற்சி மேற்கொள்ளல்
சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவுகளைக் கட்டுக்குள் வைத்தல்
உரிய நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கத் தவறும் பட்சத்தில், பித்தப்பை பிரச்னை தொடர்வதுடன், காலவரையின்றி வலியை ஏற்படுத்தும். சில பிரச்சினைகள் சிறு அசௌகரியத்தைத் தந்தாலும், இன்னும் சில உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சுகாதாரப்
பிரச்சினைகளை வழிவகுக்கும். பெரும்பான்மை பித்தப்பை பிரச்சினைகள் சிகிச்சை மூலம் முழுமையாக குணமடைவதால், உரிய நேரத்தில் மருத்துவரைச் சந்தித்து, நோய்குறிகளைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம்.