சென்னையில் மகனுடன் சேர்ந்து இளைஞரை தாக்கியதாக சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது புகார்..!!
நடிகர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர் மீதும் இவரது மகன் மீதும் சாலிகிராமத்தில் லோகய்யா தெருவை சேர்ந்த டேவிட் ராஜ் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: எனது மகன் பிரான்சிஸ் ரிச்சர்ட் (22), கடந்த 14ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சாலிகிராமம், லோகய்யா தெரு வழியாக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நடிகை, ராதா மற்றும் அவருடைய மகன் தருண் ஆகிய இருவரும் சேர்ந்து எனது மகனை கடுமையாக தாக்கினர். எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியது என்னவெனில், கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி ராதாவை பிரான்சிஸ் ரிச்சர்ட் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதே மாதம் 24ஆம் தேதி ரிச்சர்டின் உறவினர் ஒருவர் நடிகை ராதா வீட்டின் சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தினாராம்.
இந்த விவகாரங்கள் தொடர்பாக நடிகை ராதா தரப்பில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ராதாவும் அவருடைய மகனும் பிரான்சிஸை தாக்கியதாக தற்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்திருந்தனர்.