தோனி முடிவு குறித்து சத்தியமா எனக்கே தெரியாதுங்க.. தல சொல்வதை தான் கேட்போம்..சிஎஸ்கே CEO காசி பேச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி ராஜினாமா செய்திருக்கிறார். இதனை கிரிக்கட் ரசிகர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
இதனை அடுத்து புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய அணிக்காக ஆறு ஒருநாள் மற்றும் 19 t20 போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ், சிஎஸ்கே அணிக்காக 52 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிருக்கிறார்.
சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ருதுராஜ் தற்போது ஏழாவது இடத்தில் இருக்கிறார். கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் 590 ரன்கள் விளாசினார். எனினும் 2021 ஆம் ஆண்டு 16 போட்டியில் விளையாடிய ருதுராஜ், 635 ரன்கள் எடுத்து ஆரஞ்சு நிற தொப்பியையும் வென்றார். 27 வயதான ருதுராஜ் கெய்க்வாட் ஏற்கனவே மகாராஷ்டிர அணியில் கேப்டனாக இருக்கிறார்.
இதேபோன்று கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியை தலைமை தாங்கி தங்கப் பதக்கத்தையும் வென்று கொடுத்தார். இந்த நிலையில் தோனி கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்த விஷயம் தமக்கு முன்பே தெரியாது என்று சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், தோனி எது செய்தாலும் அதனை நாங்கள் பின்பற்றுவோம். அதற்கு நாங்கள் முழு ஆதரவு கொடுப்போம். தோனி அணியின் நன்மைக்காக தான் எல்லா விஷயத்தையும் செய்வார். கேப்டன்கள் அறிமுக நிகழ்ச்சியினுக்கு சற்று முன்பு தான் தோனி இந்த முடிவை அறிவித்தார்.
எனக்கே இது ஆச்சரியமாக தான் இருக்கிறது.எனினும் தோனியின் இந்த முடிவை நாங்கள் முழுமையாக இருக்கிறோம் மதிக்கிறோம்.
இது தோனியே எடுத்த முடிவுதான் என்று காசி விஸ்வநாதன் கூறியிருக்கிறார். தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் பிரியா விடை அளித்த வருகின்றனர்.