தோனி விலகல்.. கனத்த இதயத்துடன் கலங்கிய சிஎஸ்கே வீரர்கள்.. அறையில் நடந்தது இதுதான்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக முடிவு செய்த உடன் முதலில் அதை சக வீரர்களுக்கு அறிவித்து இருக்கிறார். அப்போது அந்த அறையில் என்ன நடந்தது? என்பது குறித்த தகவல்களை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறி இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் தோனி என்ற நிலையில் தான் சிஎஸ்கே அணி இருக்கிறது. 2008 முதல் 2023 வரை அணியை கட்டிக் காத்து வந்த தோனி, ஐந்து முறை அந்த அணிக்கு கேப்டனாக கோப்பை வென்று கொடுத்து இருக்கிறார். இடையே ஜடேஜா கேப்டனாக ஆக்கப்பட்ட போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அப்போது அணியைக் காப்பாற்ற தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார்.
இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடரே தோனியின் கடைசி கிரிக்கெட் தொடர் என கூறப்படும் நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை அடையாளம் காட்டி விட்டு கேப்டன் பதவியில் இருந்து விலகி இருக்கிறார் தோனி. இந்த அறிவிப்பை அவர் முதலில் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவிடம் அறிவித்து இருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் அறையில் அனைவரும் இருந்த போது தோனி தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும், ருதுராஜ் கெய்க்வாட் இனி கேப்டனாக இருப்பார் எனவும் அறிவித்து இருக்கிறார். அப்போது அனைவரும் கனத்த இதயத்துடன் கலங்கியதாகவும், கண் கலங்காத ஒரு வீரரைக் கூட அப்போது காண முடியவில்லை எனவும் பிளெம்மிங் தெரிவித்தார்.
அதன் பின்னர் அனைவரும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாழ்த்துக்களை கூறியதாகவும், மூத்த வீரர் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு உறுதுணையாக உடன் நிற்பார் எனவும் பிளெம்மிங் தெளிவுபடுத்தினார். தோனி சிஎஸ்கே அறையில் தனது முடிவை வெளியிட்ட பின்னர், அணி நிர்வாகம் இதை செய்தியாக வெளியிட்டது.