சென்னை சேப்பாக்கத்தில் மேட்ச்.. கதிகலங்கும் ஆர்சிபி.. அது மட்டும் மறுபடி நடந்தால்.. சோலி முடிஞ்சுது
2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோத உள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதிய போட்டிகளில் சிஎஸ்கே அணியே அதிக வெற்றிகளை குவித்து இருக்கிறது.
அதிலும் சென்னை சேப்பாக்கம் என்றாலே ஆர்சிபி அணிக்கு கண்டம் தான். இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சிஎஸ்கே – ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான எட்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி 7 வெற்றிகளை பெற்றுள்ளது. ஆர்சிபி அணி 2008இல் மட்டும் ஒரே ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் 31 போட்டிகளில் மோதி உள்ளன. அதில் சிஎஸ்கே 20 வெற்றிகளும், ஆர்சிபி 10 வெற்றிகளும் பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டது.
இதில் சேப்பாக்கம் மைதானத்தில் 2019இல் நடைபெற்ற லீக் போட்டியில் வெறும் 70 ரன்களுக்கு ஆர்சிபி அணி சுருண்டது. சேப்பாக்கம் மைதானம் என்றாலே கதி கலங்க வைக்கும் நினைவாக அது மாறி விட்டது.
இதுவரை 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி, 2024 ஐபிஎல் தொடரிலாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க உள்ளது. அதற்கேற்ப ஆர்சிபி மகளிர் அணி, 2024 மகளிர் ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கிறது. எனவே முதல் போட்டியில் இருந்தே வெற்றியுடன் துவக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறது ஆர்சிபி அணி.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த அணியின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது. சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை காணவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.