தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் : எந்த சின்னத்தில் தெரியுமா ?
சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த பத்தாண்டு காலமாக, பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தந்து வருகிறார். இன்றைய சூழலில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பிரதமராக வந்தால், அனைத்து நிலைகளிலும் இந்திய வளர்ச்சியடைந்த நாடாக மாறும். அதிமுக தொண்டர்களின் உரிமைகளை மீட்கின்ற குழுவாக, இருக்கும் நாங்கள் எங்களது முழு ஆதரவை தொண்டர்கள் பலத்தோடு தருவோம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொண்டர்களின் கருத்தையும், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் என அனைவரையும் நாங்கள் கேட்டறிந்தோம். எங்கள் தர்ம யுத்தத்துக்கு அதிகமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் எங்களது கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதுதான், எங்களுடைய இலக்கு. அதற்காக நாங்கள் சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். அந்த உரிமையியல் வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. எங்களது சட்டப்போராட்டம் தொடரும் நிலையில் மக்களவைத் தேர்தல் வந்துவிட்டது. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தொண்டர்களின் பலத்தை அறிய நாங்கள் 15 தொகுதிகளை கேட்டிருந்தோம்.
இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால், அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், காலதாமதம் ஏற்படுவதாலும், தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டியிருப்பதாலும், ஒரு தொகுதியில் போட்டியிட்டு எங்களது தொண்டர்களின் பலத்தை காட்ட வேண்டும். இதற்காக, ஒரு தொகுதியில் போட்டியிட்டு எங்களது பலத்தை நிரூபிக்க இன்றைய கூட்டத்தில் நாங்கள் முடிவெடுத்தோம்.
சுயேச்சை சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிடுவது என்று முடிவெடுத்திருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவெடுத்திருக்கிறோம். வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன்” என்றார்.
அப்போது எம்எல்ஏவாக இருக்கும் நீங்கள் போட்டியிடுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒரு தொண்டரை நிறுத்துவதை விட, நானே களத்தில் நின்று, எங்களது பலத்தை நிரூபிக்க விரும்புகிறேன்” என்றார்.
அதிகமான தொகுதி கேட்டதாகவும், ஒரே ஒரு தொகுதி மட்டும் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “அவர்கள் எங்களுக்கு அதிகமான தொகுதிகளை கொடுத்தனர். ஆனால் இரட்டை இலை சின்னம் இல்லாமல், சுயேச்சை சின்னத்தில் அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், பரிச்சார்த்தமாக ஒரு தொகுதியில் தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம்” என்று அவர் கூறினார்.