ஏப்.19 ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் : தேர்தல் ஆணையம்..!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.19 முதல் ஜூன் 1ம் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஜூன்.4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அந்நாளில் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் வரும் ஏப்.19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு பேரணி உட்பட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள், தேர்தல் நாளில் விடுமுறை கிடைக்காமல் வாக்களிப்பது தடைபடுகிறது. அதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
தேர்தல் நாளில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் அனைத்து வர்த்தக மற்றும் வியாபார, தொழில், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று பணிக்கு வராத பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து எவ்வித பிடித்தமும் செய்யக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.