இன்று தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!

பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. நேற்று முன்தினம் முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டையும் இறுதி செய்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.-விற்கு திருவள்ளூர் (தனி), கடலூர், மத்திய சென்னை, விருதுநகர், தஞ்சாவூர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு 60-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டுள்ளது. விருப்பமனு அளித்தவர்களுக்கு நேற்று தே.மு.தி.க. தலைமைக் கழகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது., தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளர் யார் என்பதை நாங்கள் இன்னும் உறுதி செய்யவில்லை. தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை சந்திக்கிறேன். தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று(மார்ச்22) வெளியிடப்படும்; மார்ச் 24-ம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் பரப்புரையை தே.மு.தி.க. தொடங்குகிறது; மார்ச் 25-ம் தேதி தே.மு.தி.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்கள்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *