மே மாத குருபெயர்ச்சியால் திருமணம் கைகூடி வருமா? இந்த ராசிகளுக்கு ‘டும்டும்டும்’ மேளம் கொட்டும்!
திருமணம் என்ற வார்த்தையை பொதுவாக பேசும்போது அத்துடன் குருபலன் என்பதும் ஆன்மீகத்திலும் ஜாதகத்திலும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தோன்றும் முதல் வார்த்தையாக இருக்கிறது. பொதுவாக ஜாதக ரீதியாக குரு பலன் வந்தால் திருமணம் நடந்து விடும் என்பது நம்பிக்கை. குரு பலன் என்பது ஜாதகத்திற்கு அல்லது ராசிக்கேற்ப குறிப்பிட்ட ராசியில் குரு பெயர்ச்சியாவதை குறிக்கிறது. தற்போது மே மாதம் ஒன்றாம் தேதியன்று குரு பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது.
இந்த குருபெயர்ச்சியால் யாருக்கு திருமணம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்துக் கொள்வோம். உதாரணமாக ஜாதகப்படி லக்னம், ராசி, இரண்டாவது வீடு, ஏழாவது வீடு ஆகிய வீடுகளில் குரு பெயர்ச்சியானால் குரு பலன் வந்துவிட்டதாக பொருள் கொள்ளலாம். எனவே, இதுபோன்ற அமைப்பு இருந்தால், திருமணம் நடக்கும் என்று பொதுவான பலன் ஆகும்.
திருமணத்திற்கு காரகனாக விளங்கும் குரு பெயர்ச்சி 2024 யாருடைய வாழ்க்கையில் திருமண விளக்கேற்றி வைக்கும்? என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி
சனிக்கு அடுத்தபடியாக மெதுவாக நகரும் இரண்டாவது கிரகம் குரு தான், ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாற 13 மாதங்கள் எடுத்துக் கொள்ளும் குரு மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு பயணிக்கிறார். மே 1, 2024 அன்று பிற்பகல் 14:29 மணிக்கு ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான், மே 3, 2024 அன்று இரவு 22:08 மணிக்கு, எரிப்பு நிலைக்கு செல்வார்.
அதை பிரஹஸ்பதி தாரா தூபம் அல்லது குரு தாரா தூபம் என்று அழைப்பார்கள். பிறகு ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜூன் 3 அன்று, 2024 அதிகாலை 3:21 மணிக்கு எரிப்பு நிலையில் இருந்து குரு உதயமாவார். பொதுவாக குரு எரிப்பு நிலையில் உள்ள காலத்தில் திருமணங்கள் நடத்தப்படுவதில்லை எனவே மே 3 முதல் ஜூன் மாதம் மூன்றாம் தேதி வரை திருமணங்கள் நடைபெறுவதை தவிர்ப்பார்கள்
குரு பலன் மற்றும் திருமணம்
2024ல் ரிஷப ராசியில் குரு பெயர்ச்சியால் திருமண பாக்கியத்தால் பலனடையும் ராசிகள் இவை.
மிதுனம் : செலவுகள் அதிகரிக்கும் என்றாலும், அது சுப செலவாக இருக்கும். அதுவும் திருமணம் தொடர்பான செலவாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படும். தாயாரின் உடல் நலம் மேம்படும். குருவின் அருளால் வீட்டில் சுப காரியங்கள் நடைபெற்று நிம்மதியான சூழல் நிலவும்.
கடகம் : குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் காரியத் தடைகள் அகலும், குறிப்பாக திருமண யோகம் கைகூடும். இந்த குரு பெயர்ச்சி, கடக ராசியினரின் கல்வி மற்றும் திருமண வாழ்க்கையை நிம்மதியும் மகிழ்சியும் நிறைந்ததாக மாற்றும். வருமானமும் கணிசமாக உயரும் என்பதால், குரு பெயர்ச்சி உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த நிம்மதியை அதிகரிக்கும்.
கன்னி: சொத்து வாங்கும் வாய்ப்பும், சர்வதேச பயணமும் கன்னி ராசிக்கு வாய்க்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம் தான். அதேபோல, நீண்ட நாட்களாக திருமணத்திற்காக முயற்சி செய்துக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த முயற்சிகள் வெற்றியடையும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை துணையுடன் இணக்கமான உறவு இருக்கும். காதலர்கள் மற்றும் தம்பதிகளிடையே பரஸ்பர அன்பு வலுவடையும்.
விருச்சிகம்: காதல் திருமணத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். திருமணம் நடைபெறுவதற்கான சூழலை குருபலன் ஏற்படுத்திக் கொடுக்கும். நேரத்தை உங்கள் துணையுடன் அற்புதமான முறையில் செலவிடத் தொடங்குவீர்கள். காதல் அல்லது வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்லிணக்கம் மேம்படும்,
மீனம்: நண்பர்களின் ஒத்துழைப்பால் திருமண விஷயம் சாதகமாக மாறும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதை மேம்படுத்த குடும்பத்தில் உள்ள அனைவரும் கடினமாக உழைப்பார்கள். திருமணத்திற்காக உற்றார் உறவினர்களை சந்திப்பீர்கள்.