உக்ரைனில் திடீர் குண்டு மழை.. நேரம் பார்த்து அடித்த ரஷ்யா.. திடீர் தாக்குதலுக்கு இதுதான் காரணமா..?
சர்வதேச பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் ஏற்கனவே பணவீக்கமும், இஸ்ரேல் – காசா பிரச்சனை பதம் பார்த்து வரும் வேளையில், ரஷ்யா – உக்ரைன் போர் தாக்குதல் மீண்டும் துவங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைக் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மூலம் 31 உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வான்வழி தாக்குதல் மூலம் உக்ரைன் நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைத் தாக்கப்பட்டு கடுமையாக சேதங்கள் ஏற்பட்டு உள்ளது என உக்ரைன் அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
உக்ரைன் வெளியிட்டுள்ள தரவுகள் படி ரஷ்யா சுமார் 87 க்ரூஸ் மிசைல் மற்றும் 27 டிரோன் மூலம் சுமார் 158 வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும். இரு நாடுகள் மத்தியிலான போரில் இது தான் மிகப் பெரிய வான்வழித் தாக்குதல் என்றும் 18 மூலோபாய குண்டுவீச்சு விமானங்களில் ஈடுபட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் கூறினார்.
நேட்டோ உறுப்பினரான போலந்து கூறுகையில், ரஷ்ய ஏவுகணை ஒன்று அதன் வான்வெளியில் சுமார் 40 கி.மீ தூரம் பறந்து, வெறும் மூன்று நிமிடங்களுக்குள் உக்ரைனுக்குத் நுழைந்தது. ஆனால் ரஷ்ய தரப்பில் அத்தகைய ஏவுகணைகள் உக்ரைன்-க்குள் நுழையவில்லை என்று கூறி, குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இதேவேளையில் உக்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சகம், உக்ரைன் நாட்டிற்கான மேற்கத்திய நாடுகளின் ஆதரவின் எதிர்காலத்தில் நிச்சயமற்ற தன்மை உள்ளதை வெளிப்படியாக கூறியுள்ள வேளையில் ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.