அமெரிக்காவில் இருக்கும் இந்திய மணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திரா நூயி.. வீடியோ பதிவு..!!
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அதிர்ச்சி தரும் பல்வேறு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இந்திய வம்சாவளிய நிறுவன தலைமை அதிகாரி இந்திரா நூயி கவலை தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் இருக்கும் இந்திய மாணவர்களுக்கும், அமெரிக்கா வரப்போகும் இந்திய மாணவர்களுக்கும் எச்சரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் தொடர்பான துயர சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் பெப்சிகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் பாதுகாப்பாக இருப்பதற்கு, சட்டதிட்டங்களை மதிக்க வேண்டும், போதை தரும் பொருட்கள் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
உலகளவில் மிகவும் செல்வாக்கு மிக்க வர்த்தக தலைவர்களில் ஒருவராக கருதப்படும் இந்திரா நூயி, அமெரிக்காவில் படிக்க வரும் இந்திய மாணவர்களுக்காக 10 நிமிடங்கள் நீளும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தால் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
68 வயதான இந்திரா நூயி தனது வீடியோவில், “நான் இந்த வீடியோ பதிவை வெளியிட முக்கியமான காரணம், அமெரிக்காவிற்கு வர திட்டமிட்டுள்ள அல்லது ஏற்கனவே அங்கு படித்து வரும் இளம் தலைமுறையினருடன் பேசுவதற்காகத் தான். ஏனென்றால், அமெரிக்காவில் பல இந்திய மாணவர்கள் சிக்கலான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்வது குறித்த செய்திகளை நான் தொடர்ந்து படித்து கேட்டு வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்காவில் பாதுகாப்பாக இருப்பது உங்கள் கையில்தான் உள்ளது. சட்டதிட்டங்களை மதிக்க வேண்டும், இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், போதை தரும் பொருட்கள் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு படிக்க வரும் மாணவர்கள் “கவனமாக பல்கலைக்கழகத்தையும் படிப்பையும் தேர்வு செய்யுங்கள்” என்று இந்திரா நூயி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், குடும்பம், சமூகம் மற்றும் பழக்கப்பட்ட சூழலில் இருந்து வெளியே வருவதால், அமெரிக்காவில் கல்வி கற்பது பலருக்கு கலாச்சார ரீதியான பெரும் மாற்றமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எப்போதும் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான இடங்களுக்கு, நம்பிக்கையான மனிதர்களுடன் மட்டுமே இருங்கள். மேலும் எந்த வேளையிலும் விழிப்புடன் இருப்பது அவசியம் எனவும் இந்த வீடியோ பதவில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே, அமெரிக்காவில் இந்திய மற்றும் இந்திய வம்சாவளிய மாணவர்களின் உயிரிழப்பு சம்பவங்கள் அங்குள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்த வாரம், கிளீவ்லாந்தில் காணாமல் போன 25 வயதான இந்திய மாணவர் முகமது அப்துல் அரஃபத்தை கண்டுபிடிக்க அமெரிக்க உள்ளூர் காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இவர் இந்த மாத தொடக்கத்திலிருந்து காணாமல் போயுள்ளார்.
இதேபோல், இந்திய வம்சாவளிய சமீர் கமாட் (23) என்ற மாணவர், இந்தியானாவில் உள்ள பூங்காவில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இவர் ப்ரூட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இவர் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி பல சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் நடந்துள்ளது.