CSK vs RCB : பதற்றமா.. எனக்கா.. தோனி இருக்கும் போது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ருதுராஜ் பேட்டி
17வது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக இளம் வீரர் அனுஜ் ராவத் 25 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 48 ரன்கள் சேர்த்தார்.
சிஎஸ்கே அணி தரப்பில் நட்சத்திர பவுலர் முஷ்தஃபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் களமிறங்கிய சிஎஸ்கே அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்து வெற்றியடைந்தது. சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ரன்களும், சிவம் துபே 28 பந்துகளில் 34 ரன்களும், ரஹானே 27 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும் சேர்த்தனர்.
இதன் மூலம் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வெற்றிகரமாக கேப்டன்சியை தொடங்கியுள்ளார். இந்த வெற்றி குறித்து ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், தொடக்கம் முதலே ஆட்டம் சிஎஸ்கே அணியின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. தொடக்கத்தில் சில ஓவர்கள் ரன்கள் கொடுத்த போதும், ஸ்பின்னர்கள் மற்றும் முஷ்தாஃபிசுர் மீண்டும் ஆட்டத்தை சிஎஸ்கே அணி பக்கம் திருப்பினர்.
இன்னும் 10 முதல் 15 ரன்கள் குறைவாக கட்டுப்படுத்தி இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். மேக்ஸ்வெல் மற்றும் டூ பிளஸிஸ் இருவரின் விக்கெட்டும் தான் திருப்புமுனையாக அமைந்தது. நாங்கள் 3 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தியது உதவியாக அமைந்தது. அதன்பின் பவுலிங்கில் கட்டுப்படுத்த முடிந்தது. அதுதான் திருப்புமுனையாகவும் அமைந்தது. கேப்டன்சியால் எந்த கூடுதல் அழுத்தமும் ஏற்படவில்லை. சிஎஸ்கே அணியில் அனைவரும் அனுபவம் கொண்டவர்கள். அதேபோல் தோனி இருக்கும் போது எனக்கு பிரஷரே கிடையாது.
சிஎஸ்கே அணியில் அனைவரும் அட்டாக்கிங் கிரிக்கெட் வீரர்கள் தான். அஜிங்கியா ரஹானேவும் பாசிட்டிவாக விளையாடுகிறார். அதேபோல் ஒவ்வொருவரின் பணிகளும் என்ன என்பதில் அனைவருக்கும் தெளிவு உள்ளது. அது எனக்கும் உதவியாக உள்ளது. இன்னும் சில விஷயங்களில் உழைக்க வேண்டியுள்ளது. அனைவரும் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். டாப் 3 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் 15 ஓவர்கள் வரை விளையாடினால், இன்னும் எளிதாக சேஸிங் செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.