இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது! புற்றுநோயை எதிர்த்து போராடுகிறேன் – இளவரசி கேட் வெளியிட்ட வீடியோ
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயை எதிர்த்து போராடுவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
கேட் மிடில்டன்
இளவரசி கேட் மிடில்டன் கிறிஸ்துமஸ் தினத்தன்று, தேவாலய சேவைக்காக அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து பொது நிகழ்வில் தோன்றவில்லை.
அவர் கடந்த சனவரி மாதம் Major Abdominal அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அப்போது அவர் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில், புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சையில் இருப்பதாக கேட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவர் அந்த வீடியோவில், அடுத்தடுத்த சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், ஆனால் தற்போது நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நான் சரியாகி விடுவேன்
மேலும், ”எனது மருத்துவக் குழு நான் தடுப்பு கீமோதெரபியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. நான் இப்போது அந்த சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறேன். இது நிச்சயமாக பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் வில்லியமும் நானும் எங்கள் இளம் குடும்பத்தின் நலனுக்காக இதை தனிப்பட்ட முறையில் செயல்படுத்தவும், நிர்வகிக்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.
எனது சிகிச்சையைத் தொடங்க பாரிய அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதற்கு எனக்கு நேரம் பிடித்தது. ஆனால், மிக முக்கியமாக ஜார்ஜ், சார்லோட் மற்றும் லூயிஸ் ஆகியோருக்கு எல்லாவற்றையும் அவர்களுக்குப் பொருத்தமான முறையில் விளக்கி, அவர்களுக்கு உறுதியளிக்க எங்களுக்கு நேரம் பிடித்தது. நான் சரியாகி விடுவேன்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன், ‘நான் அவர்களிடம் கூறியதுபோல் ஆரோக்கியமாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் என்னை குணப்படுத்த உதவும் விடயங்களாக என் மனம், உடல் மற்றும் ஆவி என கவனம் செலுத்துவதன் மூலம் வலுவடைந்து வருகிறேன்’ எனவும் கூறியுள்ளார்.