விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் போட்டி..!
மக்களவை தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர்கள் அறிவிப்பு. திருவள்ளூரில் (தனி) கு.நல்லதம்பி, மத்திய சென்னையில் ப.பார்த்தசாரதி, கடலூரில் சிவக்கொழுந்து, தஞ்சாவூரில் சிவநேசன், விருதுநகரில் விஜய பிரபாகர் ஆகியோர் தே.மு.தி.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் திருவள்ளூர் (தனி) வேட்பாளர் கு.நல்லதம்பி, மத்திய சென்னை வேட்பாளர் ப.பார்த்தசாரதி, கடலூர் வேட்பாளர் சிவக்கொழுந்து ஆகிய மூவரும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவை திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வேட்பாளர்கள் நேர்காணல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பங்குன்றம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் இம்முறை அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் களமிறங்க விருப்பம் தெரிவித்து விஜய பிரபாகர் விருப்ப மனு கொடுத்த நிலையில் நேற்று அவர் அதிகாரபூர்வமாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.