“எனக்கு வந்த கேப்டன் பதவியை தோனிக்கு கொடுத்தேன்”.. உண்மையை போட்டு உடைத்த ஜாம்பவான்
2007இல் இந்திய டி20 அணியின் கேப்டன் ஆனார் தோனி. 2007 டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி அவரது தலைமையில் வென்ற நிலையில், அவர் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு தானும் ஒரு காரணம் என சச்சின் டெண்டுல்கர் கூறி இருக்கிறார்.
2007இல் தன்னை இந்திய அணியின் கேப்டனாக இருக்குமாறு கூறியதாகவும்., ஆனால் தான் தோனியை கேப்டனாக நியமிக்குமாறு கூறியதாகவும் தற்போது கூறி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
இது குறித்து 2024 ஐபிஎல் தொடருக்கான ஜியோ சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சச்சின் டெண்டுல்கர், “2007இல் அப்போதைய பிசிசிஐ தலைவர் சரத் பவார் என்னை இந்திய அணியின் கேப்டனாக இருக்குமாறு கூறினார். ஆனால், நான் எனது உடல் மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கேப்டன் அணியில் வருவதும், போவதுமாக இருக்கக் கூடாது. ஒரு கேப்டன் அவரது கையில் கட்டுடனும், தோள்பட்டையில் அடிக்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டும் இருக்கக் கூடாது. அது நமது அணிக்கு சரியான விஷயமும் இல்லை என்று கூறி கேப்டன் பதவியை மறுத்தேன்” என்றார்.
மேலும், “தோனி மீதான எனது கணிப்பு சரியாக இருந்தது. ஏனெனில் நான் ஸ்லிப்பில் ஃபீல்டிங் நின்று இருக்கும் போது அவருடன் நிறைய பேசுவேன். இந்த சூழ்நிலையில் நீ என்ன முடிவு எடுப்பாய்? என நான் கேட்பேன். அவர் மிகவும் உள்ளுணர்வுடன், அந்த தருணத்தில் என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வுடன் இருப்பார்.” என்றார் சச்சின் டெண்டுல்கர்.
மேலும், “அவரது மனம் நிலையாக இருந்தது. எப்போதும் அமைதியாக இருந்தார். சரியான முடிவுகளை எடுத்தார். அந்த சமயத்தில் நான் பிசிசிஐ தலைவரிடம். “தோனியிடம் தலைமைப் பண்புகள் உள்ளன. அவரை நீங்கள் கேப்டனாக்க ஆலோசிக்கலாம் எனக் கூறினேன்” என்றார் சச்சின் டெண்டுல்கர்.
2007 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் நடந்த சம்பவங்கள் குறித்தே சச்சின் டெண்டுல்கர் கூறி இருப்பதாக தெரிகிறது. அந்த உலகக்கோப்பை தொடரில் சச்சின், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே போன்ற மூத்த வீரர்கள் பங்கேற்கப் போவதில்லை என முடிவு செய்தனர். அதன் பின்னரே தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது சேவாக், யுவராஜ் சிங் போன்ற அணியின் மூத்த வீரர்களை தாண்டி தோனிக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.