உக்ரைன் மீது பாரிய ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஸ்யா
உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு ஒன்றின் மீது ரஸ்யா பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ரஸ்யா இந்த தாக்குதலை நேற்று ( 22.03.2024 ) இரவு மேற்கொண்டுள்ளது.
இதன்போது, கிழக்கில் கார்கிவ், கடற்கரையில் ஒடேசா மற்றும் மையத்தில் க்ரிவி ரிஹ் உட்பட பல நகரங்களில் மின் விநியோகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலடி
இதன் காரணமாக, நாட்டின் குறைந்தது 10 பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரஸ்ய அதிகாரிகளின் அறிக்கைகளில், கடந்த வெள்ளிக்கிழமை காலை நடாத்தப்பட்ட தாக்குதல்களால் 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனின் இராணுவ தொழிற்றுறை வளாகம் மீது பாரிய தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளது.
உக்ரைனின் இராணுவம் மற்றும் உக்ரேனிய சார்பு ரஸ்ய போராளிகளின் குழுக்கள் என்பன இணைந்து அண்மையில் ரஸ்யாவின் எல்லைப் பகுதிகளான பெல்கோரோட் மற்றும் குர்ஸ்க் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியமைக்கு பதில் வழங்கும் வகையிலேயே நேற்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.
ஏவுகணை தாக்குதல்
அது மாத்திரமன்றி, ரஸ்யாவின் தாக்குதல் காரணமாக நிலக்கரி சுரங்கங்கள் மின்சாரத்தை இழந்தபோது அவற்றில் 1,000இற்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
எனினும், குறித்த தொழிலாளர்கள் தரையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் யாருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என உக்ரெய்ன் அறிவித்துள்ளது.
மேலும், ரஸ்யாவின் இந்த தாக்குதல்களின்போது 151 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும் இதில் 12 இஸ்கண்டர் எம் போலிஸ்டிக் ஏவுகணைகள், 7 கின்சல் (Kh-47 M2) போலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 5 (Kh-22) க்ரூஸ் ஏவுகணைகள் அடங்குவதாக உக்ரைனின் விமானப்படையின் தளபதி தெரிவித்துள்ளார்.