அமெரிக்காவிற்கு பால் ஏற்றுமதி.. குஜராத் அமுல் மெகா கூட்டணி..!
இந்தியாவின் மிகப்பெரிய பால் கூட்டுறவு அமைப்புகளில் ஒன்றான குஜராத் கோ-ஆப்டரேட்டிவ் மில்க் மார்க்கெட்டிங் ஃபெடரேஷன் (GCMMF), அமுல் பிராண்ட் கீழ் பால் மற்றும் பால் சார்ந்த பிற பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
சமீபத்தில் அமுல் வட மாநிலங்களை தாண்டி தென்னிந்திய மாநிலங்களில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்ததில் பெரும் பிரச்சனை வெடித்தது. குறிப்பாக கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு நிலவியது, இந்த நிலையில் தற்போது அமுல் முதல் முறையாக வெளிநாடு அதுவும் அமெரிக்காவில் பால் விற்பனையை விரிவாக்கம் செய்துள்ளது.
அமெரிக்காவில் அமுல் பிராண்டின் பால் விற்பனைக்கு வரவுள்ளது. அமுல் பிராண்டின் இந்த புதிய முயற்சியின் கீழ் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் அமெரிக்காவின் மத்திய மேற்கு சந்தைகளில் “பதப்படுத்தப்படாத பால்” விற்பனை செய்வதற்காக மிச்சிகன் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் (Michigan Milk Producers Association – MMPA) இணைந்துள்ளது.
“அமுல் தனது பதப்படுத்தப்படாத பால் பொருட்களை அமெரிக்காவில் அறிமுகப்படுத்த இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குஜராத் கோ-ஆப்டரேட்டிவ் மில்க் மார்க்கெட்டிங் ஃபெடரேஷனின் மேலாண்மை இயக்குநர் ஜெயன் மேத்தா தெரிவித்தார்.
அமெரிக்காவில் 108 ஆண்டுகள் பழமையான பால் கூட்டுறவு நிறுவனமான மிச்சிகன் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் நாங்கள் இணைந்துள்ளோம். இந்த அறிவிப்பு மார்ச் 20 ஆம் தேதி மிச்சிகன் அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜெயன் மேத்தா தெரிவித்தார்.
அமுல் பிராண்ட் முதல் முறையாக இந்தியாவிற்கு வெளியே தனது பால், பதப்படுத்தப்படாத பால் வகைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கும் சந்தையில் இது நிகழ்கிறது கூடுதல் மகிழ்ச்சி எனவும் ஜெயன் மேத்தா தெரிவித்தார்.
அமெரிக்காவில் அமுல் தனது பதப்படுத்தப்படாத பால் வகைகளை ஒரு கேலன் (3.8 லிட்டர்) மற்றும் அரை கோலன் (1.9 லிட்டர்) பேக்குகளில் அமுல் பிராண்ட் பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட அமுல் கோல்டு, 4.5 சதவீத கொழுப்பு சத்துடன் அமுல் சக்தி, 3 சதவீத கொழுப்பு சத்துடன் அமுல் டாசா மற்றும் 2 சதவீத கொழுப்பு சத்துடன் அமுல் ஸ்லிம் ஆகிய பால் வகைகள் அடங்கும்.
இதன் விலை தற்போது அறிவிக்கப்படவில்லை என்றாலும், அமுல் பால் கட்டாயம் ப்ரீமியம் பிரிவில் தான் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அரிசி, பருப்பு ஆகியவை இந்தியாவில் விலை உயர்ந்தால் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படும்.
இந்தியாவில் தற்போது பால் விலை லிட்டர் 50 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படும் வேளையில், ஏற்றுமதி செய்ய துவங்கப்பட்டு உள்ளது. இதனால் உள்நாட்டில் பால் தட்டுபாடு ஏற்படுமா என்ற கேள்வியும், பால் விலை உயருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.