நிர்மலா சீதாராமன் வெளியிட்ட ஒரு அறிவிப்பு.. மொத்தமும் தலைகீழாக மாறியது..!!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட் அறிக்கையில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான (SCSS) அதிகபட்ச டெபாசிட் வரம்பை 15 லட்சம் ரூபாயில் ரூ.30 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார்.
இந்த ஒரு அறிவிப்பால் என்னவெல்லாம் நடந்துள்ளது தெரியுமா, SCSS என்பது 60 வயதிற்கும் அதிகமானவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு முதலீட்டு திட்டம். இத்திட்டம் நிலையான வட்டி வருமானத்தை அளிக்கிறது, அதேபோல் வங்கி வைப்பு நிதியை காட்டிலும் கூடுதலாக வட்டி வருமானத்தை அளிக்கிறது.
இந்த ஒரு காரணத்தாலும், பட்ஜெட் அறிவிப்பாலும் நடந்த கூத்தை நீங்களே பாருங்க.
2024ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் தபால் துறையில் வழங்கப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) டெபாசிட் செய்யப்பட்ட தொகை வியப்பளிக்கும் வகையில் ரூ.90,000 கோடியாக உயர்ந்துள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.37,362 கோடியுடன் ஒப்பிடும் போது தற்போது 90000 கோடி ரூபாய் என்பது சுமார் 140 சதவீதம் அதிகரிப்பாகும்.
இதேபோல், மாத வருமான திட்டத்திலிருந்து வரும் தொகை, 2023-24 நிதியாண்டில் முழு ஆண்டுக்கான ரூ.5,000 கோடியுடன் ஒப்பிடும்போது, தற்போது கிட்டத்தட்ட ரூ.20,000 கோடியாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், நடப்பு நிதியாண்டில் தொடங்கப்பட்ட மகளிர் சம்மான் சேமிப்பு பத்திரம் திட்டம் இதுவரை ரூ.19,000 கோடிக்கும் மேல் நிதியை முதலீடாக பெறப்பட்டு உள்ளது என்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார் கூறினார்.
இதேபோல் மத்திய அரசின் பட்ஜெட்டில் மாத வருமான கணக்கு திட்டத்திற்கான வரம்புகள் தனிப்பட்ட கணக்குகளுக்கு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.9 லட்சமாகவும், கூட்டுக் கணக்குகளுக்கு ரூ.9 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாகவும் உயர்த்தப்பட்டன.
அதிகப்படியான வட்டி விகிதம் மற்றும் அதிகரிக்கப்பட்ட அதிகபட்ச டெபாசிட் வரம்பு காரணமாகவே இந்த மக்கள் தபால் துறையின் இந்த சிறப்பு முதலீட்டு திட்டத்தில் பணத்தை கொட்டியுள்ளனர், இதன் வாயிலாகவே வைப்பு தொகையில் தடாலடி உயர்வு பதிவாகியுள்ளது.