அந்த முடிவு தவறாகிவிட்டது.. இஷாந்த் சர்மாவின் காயமும் முக்கிய காரணம்.. தோல்வி குறித்து ரிஷப் பண்ட்!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இஷாந்த் சர்மா காயமடைந்தது தங்களுக்கு பின்னடைவாக மாறியதாக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை சேர்த்தது. 17வது ஓவரிலேயே 8 விக்கெட்டுகளை இழந்ததால், டெல்லி அணி தரப்பில் இம்பேக்ட் வீரராக அபிஷேக் போரல் களமிறக்கப்பட்டார். அவர் கடைசி 10 பந்துகளில் 32 ரன்களை விளாசி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடிய சாம் கரன் 46 பந்துகளில் 63 ரன்கள் விளாசி அசத்தினார். அதேபோல் கடைசி வரை களத்தில் நின்று அசத்திய லிவிங்ஸ்டன் 21 பந்துகளில் 38 ரன்களை சேர்த்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இதனால் டெல்லி அணி தனது முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசுகையில், இஷாந்த் சர்மாவின் காயம் எங்களுக்கு எவ்வளவு பின்னடைவை ஏற்படுத்தியது என்பது கண்கூடாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். எங்களின் மோசமான பேட்டிங் காரணமாக இம்பேக்ட் பிளேயரை பயன்படுத்திவிட்டோம். இதனால் ஏற்கனவே ஒரு பவுலர் குறைவாக இருந்தார்.
இந்த சூழலில் இஷாந்த் சர்மாவின் காயமும் சேர்ந்து கொண்டது. நாங்கள் எதிர்பார்த்ததை போல் அபிஷேக் போரல் டெல்லி அணிக்கு தேவையான ரன்களை கடைசி நேரத்தில் பெற்று கொடுத்தார். அதேபோல் பவுலர்களும் கடினமான சூழல்களில் விக்கெட்டை வீழ்த்தி மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தனர். எனது கம்பேக் போட்டி இது. கொஞ்சம் பதற்றம் இருந்தது.
ஆனால் தோல்விக்கு எந்த காரணத்தையும் சொல்ல விரும்பவில்லை. ஒரு பவுலர் இல்லை என்பதும் எங்களின் தவறு தான். பஞ்சாப் அணியினர் சிறப்பாக விளையாடினார்கள். அபிஷேக் போரல் இளம் வீரர். ஸ்பெஷலான இன்னிங்ஸை ஆடி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும், 2017ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அணி எந்தவொரு தொடக்க போட்டியிலும் தோல்வியடைந்ததில்லை. 2020ஆம் ஆண்டு மட்டும் ஆட்டம் சமனில் முடிந்து சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.