5 ஓவரில் 85 ரன்.. யாருய்யா நீ.. அதிரடி மன்னனை இறக்கிய கொல்கத்தா.. கதிகலங்கிய சன்ரைசர்ஸ்
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆடிய ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கதிகலங்கிப் போனது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் பில் சால்ட் அபாரமாக ஆடி 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். ஆனால், மறுபுறம் விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தது.
சுனில் நரைன் 2, வெங்கடேஷ் ஐயர் 7, ஸ்ரேயாஸ் ஐயர் 0, நிதிஷ் ராணா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஏழாம் வரிசையில் இறங்கிய ரிங்கு சிங் விக்கெட் வீழ்ச்சியை நிறுத்தினார். அவர் அதிரடி ஆட்டம் ஆடப் போகிறார் என எதிர்பார்த்த நிலையில் எட்டாம் வரிசையில் இறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் சிக்ஸ் மழை பொழிந்து போட்டியை மாற்றினார்.
கடைசி 5 ஓவர்களில் மட்டும் கொல்கத்தா அணி 85 ரன்கள் சேர்த்தது. 7 சிக்ஸர்கள் விளாசிய ரஸ்ஸல் 20 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடிய அவர் 25 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிங்கு சிங் 15 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்தது. அந்த அணி 13.5 ஓவர்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்களை இழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த இடத்தில் இருந்து 208 ரன்களுக்கு அந்த அணியை அழைத்துச் சென்றார் ரஸ்ஸல்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் 15 ஓவர்கள் வரை போட்டியை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் ரஸ்ஸல் ஆடிய அதிரடி ஆட்டம் அந்த அணியை நிலைகுலைய வைத்தது.