ரயில்களில் பணம், பரிசு பொருட்கள் கடத்துவதை தடுக்க சிறப்பு தனிப்படை..!

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க தொகுதி வாரியாக பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையை நடத்தி வருகின்றனர். ஆங்காங்கே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் ₹50 ஆயிரத்திற்கு அதிகமான பணத்தையும், சேலை, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்களையும் பறிமுதல் செய்கின்றனர்.

மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை சோதனை அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பணம் மற்றும் பரிசு பொருட்களை ரயில்களில் கடத்திச் செல்ல வாய்ப்புகள் உள்ளது. இதனால், ரயில்களிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் தேர்தல் சோதனையை மேற்கொள்ள தமிழக ரயில்வே போலீஸ் கூடுதல் டிஜிபி வனிதா உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் சென்னை, திருச்சி ரயில்வே மண்டலங்களில் டிஐஜி ராமர் உத்தரவின் பேரில், உட்கோட்ட அளவில் ஸ்டேஷன் வாரியாக சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், மாநிலம் முழுவதும் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்து, சந்தேகப்படும் படியான நபர்கள் மற்றும் அவர்கள் எடுத்து வரும் உடமைகளை சோதனையிட்டு வருகின்றனர். சேலம் ரயில்வே உட்கோட்டத்தில், சேலம், தர்மபுரி, ஓசூர், ஜோலார்பேட்ைட, காட்பாடி ஆகிய 5 ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்களிலும் தலா 2 சிறப்பு தனிப்படையை டிஎஸ்பி பெரியசாமி அமைத்துள்ளார். இத்தனிப்படை போலீசார், தங்களது சோதனையை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

சேலம் ரயில்வே ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐக்கள் முருகன், சுப்பிரமணி தலைமையில் அமைந்துள்ள அத்தனிப்படை போலீசார், சென்னை, பெங்களூரு மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் சோதனையிட்டு வருகின்றனர். அதேபோல், சேலத்தில் இருந்து செல்ல பிளாட்பார்ம்களில் காத்திருக்கும் பயணிகளில் சந்தேகப்படும் படி இருக்கும் நபர்களின் உடமைகளை பரிசோதிக்கின்றனர். இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், `சாலை மார்க்கமாக தேர்தலுக்காக பணம், பரிசு பொருட்களை எடுத்துச் சென்றால், சிக்கி விடுவோம் என ரயில்களில் கடத்தி வர வாய்ப்புகள் உள்ளது.

அதனால், ரயில்களில் அதிகப்படியான அளவு பணம் மற்றும் பரிசு பொருட்களை எடுத்து வருவதை கண்டறிந்து பிடிக்க சிறப்பு தனிப்படை போலீசாரின் சோதனை 24 மணி நேரமும் இருக்கிறது. இத்தனிப்படை போலீசார், இத்தேர்தல் முடியும் வரை தொடர்ந்து சோதனை மேற்கொள்வார்கள். சிக்கும் பணம் மற்றும் பரிசு பொருட்களை உரிய முறையில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிக்கும் நபர்கள் மீது உரிய வழக்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *