14 ஆக இருந்த தேசிய கட்சிகள் எண்ணிக்கை 6 ஆக சரிவு..!
நாடு சுதந்திரம் அடைந்து நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் (1951) 51 கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. அதன்பின் அதாவது 1970ம் ஆண்டுக்குப் பிறகு அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையில் படிப்படியாக உயர்ந்தது. கடந்த 1951ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 53 கட்சிகளில் 14 தேசிய கட்சிகள் மற்றவை மாநில கட்சிகளாக இருந்தன. தேசிய கட்சிகளில் சில கட்சிகள் தொடர்ந்து செயல்படாமல் இருந்ததால், தேசிய கட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 1953ல் 23 கட்சிகள் தேசியக் கட்சியாக அங்கீகாரம் கோரி இருந்தாலும், அதில் 14 கட்சிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின் 1957ல் தேசிய கட்சிகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. 1962ல் 27 ஆக அதிகரித்தது. கடந்த 1996 பொதுத் தேர்தலில் 209 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இதில் 8 கட்சிகள் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தன. 1998ல் தேசிய அந்தஸ்து பெற்ற ஏழு கட்சிகள் உட்பட 176 கட்சிகள் போட்டியிட்டன. 1999ல் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை 160 ஆகக் குறைந்தது. அதேநேரம் தேசிய கட்சிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. கடந்த 2014ல் கட்சிகளின் எண்ணிக்கை 464 ஆகவும், தேசிய கட்சிகள் 6 ஆகவும் அதிகரித்தது. கடந்த 2016ல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்தது.
அதன்பின் 2019ல் 7 தேசிய கட்சிகள் உட்பட 674 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இந்தத் தேர்தலுக்குப் பிறகு திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், இ.கம்யூ ஆகிய கட்சிகள் தேசியக் கட்சி அந்தஸ்தை இழந்தன. கடந்த ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அந்தஸ்து கிடைத்தது. தேர்தல் ஆணைய விதிகளின்படி, தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் மூன்று வெவ்வேறு மாநிலங்களில் இருந்து மக்களவையின் மொத்த இடங்களில் குறைந்தது இரண்டு சதவிகிதம் அல்லது நான்கு மாநிலங்களில் இருந்து குறைந்தபட்சம் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும். கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்கள் மற்றும் 2014 முதல் 21 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் கட்சிகளின் தேசிய அந்தஸ்து குறித்து ஆணையம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சிபிஐ-எம், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு மட்டுமே தேசிய அந்தஸ்து உள்ளது. தற்போது நடைபெறும் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 2,500 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆனால் கடந்த 73 ஆண்டுகளில் தேசிய கட்சிகளின் எண்ணிக்கை 14ல் இருந்து 6 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.