சினைப்பை நீர்க்கட்டி. ஆயுர்வேதத் தீர்வு!
அதிலும் குறிப்பாகக் குழந்தைப் பேறின்மை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் இன்ஃபர்டிலிடி கிளினிக், ஃப்ர்டிலிடி ஹாஸ்பிடல் போன்றவை இப்பொழுது பெருநகரங்களில் மட்டுமில்லாமல் சிறு நகரங்களிலும் கூட காளான்கள் போலப் பெருகிக் கொண்டேதான் இருக்கின்றன.
இதற்கு நாம் பல்வேறு காரணங்களை ஆராய்ந்து பார்த்தாலும் முக்கியமான காரணமாக பெண்களுக்கு வரும் சினைப்பை நீர்க்கட்டிகளும் அதனால் வரக்கூடிய குழந்தைப்பேறின்மை பிரச்னையும் முதல்காரணமாக நமக்குப் புலப்படுகிறது. அண்மையில் இந்தியாவிலே நடந்த ஒரு கருத்துக்கணிப்பில் ஏறக்குறைய 30 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களில் 50% பேருக்கு இந்த சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருப்பதாக தெரியவந்துள்ளது
ஒரு குடும்பம் தழைக்கவும் அந்த வம்சம் விருத்தி அடையவும் முக்கியமாக கருதப்படுவது திருமணமும் அதைத் தொடர்ந்து வருகிற கர்ப்பம் தரித்தலும் ஆரோக்கியமான குழந்தையுமே ஆகும். ஆனால் இதற்கு முதற்கட்ட பிரச்சனையாக அமைவது இந்த சினைப்பை
நீர்க்கட்டிகளே.பாலிசிஸ்டிக் ஓவரியன் டிஸ்ஆர்டர்(பிசிஓடி) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களினால் வரும் ஒரு நோயாகும். இதன் அறிகுறிகள் மெல்லமெல்லதான் தெரிய ஆரம்பிக்கும்.
பெண்கள் பருவமடைந்தபிறகு உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன்கள் சுரப்பு தற்போதுள்ள மாறிவரும் வாழ்க்கைமுறை, உடல் உழைப்பின்மை, மிகுதியான கொழுப்புள்ள துரித மற்றும் தவறான உணவுப்பழக்கம், மனஅழுத்தம் போன்ற காரணங்களினால் குறைவதாலும், அதேபோன்று ஆண்களுக்கு (ஒரு ஆரோக்கியமான ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் ஓரளவு ஆண் ஹார்மோன்கள் உருவாகின்றன) சுரக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் பெண்களுக்கு அதிகமாக சுரப்பதாலும்
சினைப்பையில் நீர்க்கட்டிகள் உண்டாகின்றன. இது எல்லா பெண்களிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. பிசிஓடி என்பது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(பிசிஓஎஸ்) யின் முந்தைய நிலைதான்.
பொதுவாகக் கர்ப்பப்பையில் இருபுறமும் சினைப்பைகள் இருக்கும், இந்த சினைப்பையில் (ஓவரி) நிறைய சினைமுட்டைகள் இருக்கும். இந்த சினைமுட்டைகள் ஒவ்வொன்றாக மாதம்தோறும் முதிர்ச்சி அடைந்து மாத விடாய் ஆரம்பித்த 14ஆவது அல்லது 15 ஆவது நாட்களில் வெடித்து அதிலிருந்து கருமுட்டைகள் வெளியில் வந்து சினைக்குழாய் மூலமாக கர்ப்பப்பையை சென்றடைந்து அங்கு ஆண்விந்து வருமேயானால் அதனுடன் சேர்ந்து கர்ப்பமாக மாறி பின் மாதந்தோறும் வளர்ச்சி அடையும்.