தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில வழிக் கல்வி பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வில் சுமார் 77,865 மாணவர்கள் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்வுகளில் பங்கேற்கவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள 75 மையங்களில் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வரும் மே 6-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி துவங்கி மார்ச் 25ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது.