மட்டன் வாங்க போறீங்களா ? இறைச்சியின் எந்தப் பகுதியை வாங்க வேண்டும் தெரியுமா ?
இறைச்சி எப்படி இருக்க வேண்டும்?
தொங்கிக்கொண்டிருக்கும் இறைச்சியின் கழுத்துப் பகுதியை கவனிக்க வேண்டியது இதில் மிக அவசியமானது. கழுத்துப் பகுதி தடிமனாக, இருந்தால் அது முதிர்ந்த ஆட்டின் இறைச்சியாகவே இருக்கும். எனவே, இந்த இறைச்சியை வேகவைக்கச் சிரமப்பட வேண்டியிருக்கும்.
கழுத்துப் பகுதி மிகவும் சிறிதாக இருந்தால் இது குட்டியின் இறைச்சியாக இருக்கலாம்; அல்லது சரியான வளர்ச்சியில்லா சவலை ஆடாக இருக்கலாம். இந்த வகை ஆட்டின் கறி வழவழப்பாகப் பசை இல்லாமல் இருக்கும். இதுவும் நமது சமையலுக்கு ருசி சேர்க்காது. மிதமான கழுத்து உள்ள இறைச்சி சமையலுக்கு உகந்தது.
கழுத்தின் வெட்டுப்பட்ட பகுதி ஐஸ்க்ரீமை வெட்டியது போல் (Smooth cuting) இருந்தால், ஏற்கெனவே இறந்த ஆட்டினை வாங்கி கசாப்பு செய்திருக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ளலாம். இதுமாதிரியான இறைச்சியை நமது ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு தவிர்க்கலாம்.கழுத்தின் வெட்டுப் பகுதி பிசிறுகளுடனும் இறைச்சி இளம் சிவப்பு நிறத்திலும் இருந்தால் நல்லது.
கிட்னியைச் சுற்றிக் கொழுப்பு சூழ்ந்திருந்தால், அது போஷாக்காக வளர்க்கப்பட்டுள்ளதற்கான அடையாளம்.
இறைச்சி பழையதா அல்லது ஆரோக்கியமான ஆடா? என்பதையெல்லாம் வெட்டி தொங்க விட்டிருக்கும் இறைச்சியில் தேங்கி வடிகின்ற ரத்தத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். நல்ல ஆரோக்கியமான ஆடாக இருந்தால் வெட்டப்படும்போது உடலில் ரத்தம் எங்கும் தங்காமல் வடிந்துவிடும்.எங்கும் தேங்கியிருக்காது. இதுவே ஏதேனும் நோய்வாய்ப்பட்ட ஆடாக இருந்தால் ஆங்காங்கே சிறிது சிறிது ரத்தம் தேங்கி இருக்கும்.
இதுவே ஆடு இறந்து போனபின் அறுத்ததாக இருந்தால் ரத்தம் முழுவதும் அப்படியே உடலில் படிந்திருக்கும். ஒரே பருவத்தில் உள்ள இரண்டு ஆடுகள் வெட்டப்படுகிறது என்றால் அதில் நிச்சயம் பெட்டை ஆட்டின் கறியைத் தேர்ந்தெடுங்கள்.
பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கு பலத்தைக் கொடுக்கும். ஆட்டின் கழுத்துப் பகுதியில் உள்ள கறி மிகவும் மென்மையானதாகவும் சுவையாகவும் இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மென்று சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பகுதியில் கொழுப்பே இருக்காது.
உடல் சூட்டால் அவதிப்படுகின்றவர்களுக்கு சிறந்த மருந்தாக இருப்பது ஆட்டினுடைய நாக்குப்பகுதி தான்.
ஆட்டினுடைய கொழுப்பானது இடுப்புப் பகுதிக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.உடம்பில் எத்தகைய வலி மற்றும் புண்ணையும் ஆற்றக்கூடிய குணம் கொண்டது. அம்மை நோய், அக்கி நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக ஆட்டுக் கொழுப்பை சொல்லலாம்.
ஆட்டின் மூளை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும். ஆண்களுக்கு ஆண்மை விருத்திக்கும்,
ஆட்டுக்கால் சூப் எலும்புக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நெஞ்சு சளியை வெளியேற்றும். கால்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.
இறைச்சியின் எந்தப் பகுதியை வாங்க வேண்டும்?
சிலர் தொடைக் கறியை மட்டும் கொடுங்கள் என்று வாங்குவார்கள். அந்தப் பகுதி வேகுவதற்குக் கொஞ்சம் அதிக நேரம் ஆகும். ஆட்டின் கழுத்து, நெஞ்சுப் பகுதி, முன்னங்கால் பகுதி, தொடைப் பகுதி, ஈரல் என எல்லாப் பகுதிகளிலிருந்தும் சீராக இருக்குமாறு வாங்குவது நல்லது.
இளம் சிகப்பு நிறம் இறைச்சியாக இருந்தால் நல்லது. கொஞ்சம் டார்க்காக இருந்தால் அது வயதானதாக இருக்கும். இதை வேகவைக்கச் சோடா உப்பு, பப்பாளிக் காய் எனப் பல டிப்ஸ்கள் தேவைப்படும். மேலும், சாப்பிட்டு முடித்த பின் பல் இடுக்கில் மாட்டிக்கொண்ட இறைச்சி துகள்களை அகற்றும் வேலை பிரதானமாக இருக்கும்.
ஆடு அறுக்கும்போதே அருகில் காத்திருந்து சுடச்சுட அந்த இறைச்சியை வாங்கிவந்து வேகவைத்தால் அது இளம் ஆடாக இருந்தாலுமே வேகவைக்கச் சிரமப்பட வேண்டும். ஆடுகள் அறுக்கப்பட்டுச் சில மணிநேரங்கள் தொங்கவிடும்போதுதான் தசைப் பகுதியில் உள்ள மையோகுளோபின் மாறுதல்கள் நடந்து விரைப்புத் தன்மை விலகி, சமைக்கத் தயாராகும். எனவே, அப்படி வாங்கி வந்த இறைச்சியை நல்ல காற்றோட்டமான பாத்திரத்தில் சில மணிநேரம் வைத்திருந்து பிறகு சமைக்கலாம்.
ரத்தம், குடல் வறுவல் விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இதில் சத்துகள் குறைவு; ஆரோக்கியத்திற்கும் அவ்வளவு நல்லது இல்லை. ஆசையாக இருந்தால், நன்றாகச் சமைத்து சில நாட்கள் சாப்பிடலாம்.