ருசியான மணமணக்கும் மாம்பழ மோர்குழம்பு… இவ்வளவு எளிமையா செய்யலாமா?
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும்.
மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார் சத்து மிகுந்திருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.
மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அளப்பரிய மருத்துவ குணங்களை கொண்ட மாம்பழத்தை கொண்டு சுவையான மாம்பழ மோர்குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இனிப்பான மாம்பழங்கள் – 2
புளித்த மோர் – 2 கப்
அரிசி – 1 தே.கரண்டி
சீரகம் – 1தே.கரண்டி
கடுகு – 1/2 தே.கரண்டி
வெந்தயம் – 1/4 தே.கரண்டி
பச்சை மிளகாய் – 1
காய்ந்த மிளகாய் – 2
தேங்காய் துருவல் – ஒரு கப்
தேங்காய் எண்ணெய் – 1 தே.கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் மாம்பழங்களை வெட்டிப் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.
அதன் பின் புளித்த மோரை மிக்சியிலோ அல்லது கரண்டியிலோ நன்றாக கலக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தேங்காய் துருவல், அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் ஆகிவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த பேஸ்டை மோரில் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்த மாம்பழத்தில் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
மோர் குழம்பு நன்றாக கொதித்த பின்னர் இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனை குழம்பில் ஊற்றினால் மணமணக்கும் மாம்பழ மோர் குழம்பு தயார்.
கோடை காலத்தில் வாரம் ஒரு முறை இந்ம மாம்பழ மோர் குழம்பு செய்து சாப்பிடுவதால் உடல் குளிர்சியாவதுடன் இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.