ராதிகா நடித்த படம், விளம்பரம் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு சென்ற புகார்..!
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் நடித்த திரைப்படம், விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இன்று முதல் அவர் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமாரின் திரைப்படம், நாடகம் மற்றும் விளம்பரங்களை ஒளிபரப்பத் தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் கட்சி பணிக்குழு நிர்வாகி செய்யதுபாபு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு உள்ள நிலையில், விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் நடித்த திரைப்படங்கள், நாடகங்கள் உள்ளிட்டவை பெரும்பாலான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவிருப்பதால் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ்ராஜ் குமாரின் படங்களை திரையிட தடை கோரி பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது