Harshit Rana, IPL 2024: ஓவர்நைட்டுல ஹீரோவான ஹர்ஷித் ராணா – மாயங்க் அகர்வாலுக்கு செண்ட் ஆஃப் கொடுத்ததால் ஃபைன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 3ஆவது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், பிலிப் சால்ட் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆண்ட்ரே ரஸலில் அதிரடி பேட்டிங்கால் கேகேஆர் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. ரஸல் அதிகபட்சமாக 25 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர், 209 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் செய்தது. இதில், மாயங்க் அகர்வால் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் குவித்தது. இதில் மாயங்க் அகர்வால் 21 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 32 ரன்கள் எடுத்து ஹர்ஷித் ராணா ஓவரில் ரிங்கு சிங்குவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் தான் தனது ஓவரில் மாயங்க் அகர்வால் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து அவருக்கு செண்ட் ஆஃப் கொடுக்கும் வகையில் கையால் முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார். இதற்கு கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பாராட்டு தெரிவித்திருந்தாலும், போட்டி நடைமுறையின்படி இது அத்துமீறல் செயலாகும். ஆதலால், போட்டி சம்பளத்திலிருந்து ஹர்ஷித் ராணாவுக்கு 60 சதவிகிதம் வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் கேகேஆர் அணியில் ரூ.20 லட்சத்திற்கு இடம் பெற்று விளையாடி வரும் ஹர்ஷித் ராணாவிற்கு இந்த சீசனில் நல்ல தொடக்கம் கொடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை இருந்த நிலையில் அந்த ஓவரில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றி 9 ரன்கள் மட்டுமே கொடுத்து கேகேஆர் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து மாயங்க் அகர்வால், ஷாபாஸ் அகமது மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரது விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்துள்ளார்.