காதலுக்காக ரூ.2500 கோடி சொத்துக்களை உதறித் தள்ளிய கோடீஸ்வர பெண்.. சிலிர்க்க வைக்கும் காதல் கதை..
உலகம் முழுவதும் உள்ள மக்களை ஒன்றாக இணைக்கும் பொதுவான உணர்வுகளில் ஒன்று தான் காதல். காதல் அனைத்து எல்லைகளையும் வேறுபாடுகளையும் கடந்தது. காதலுக்காக எதையும் தியாகம் செய்யும் பலர் இருக்கின்றனர். தாங்கள் நேசித்த நபருக்காக தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறவும், தங்கள் துணையுடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் காதலனை திருமணம் செய்ய ரூ.2500 கோடி மதிப்பு சொத்துக்களை உதறி தள்ளிய பெண் பற்றி தெரியுமா?
ஆம். உண்மை தான் மலேசியாவை சேர்ந்த கோடிஸ்வர குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினர் காதலை ஏற்காததால் தனது ம்பரை சொத்துக்களை விட்டுச் சென்றுள்ளார். மலேசிய தொழிலதிபர் கூ கே பெங் மற்றும் முன்னாள் மிஸ் மலேசியா பாலின் சாய் ஆகியோரின் மகள் தான் ஏஞ்சலின் பிரான்சிஸ்.
பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இவர் காதலித்தது என்னமோ சாதாரண மனிதனை தான். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஏஞ்சலின் பயின்ற போது தன்னுடன் படித்த சக மாணவரான ஜெடிடியாவை காதலித்துள்ளார். ஏஞ்சலின் தனது காதலை பற்றி பெற்றோரிடம் தெரிவித்த போது அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பணம், சொத்து, அந்தஸ்து போன்ற காரணங்களை கூறி ஏஞ்சலின் காதலை அவரின் தந்தை ஏற்கவில்லை. இதன் விளைவாக, அவர் தனது குடும்பத்தை விட்டு வெளியேறி தனது காதலரை திருமணம் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார். எனவே தனது நீண்டகால காதலரான ஜெடிடியா பிரான்சிஸை திருமணம் செய்வதற்காக 300 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ. 2,484 கோடி) தனது பரம்பரை சொத்துக்களை வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
ஏஞ்சலினும் ஜெடிடியாவும் 2008-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றன.. ஏஞ்சலினை போலவே கடந்த 2021 ஆம் ஆண்டில், ஜப்பானின் இளவரசி மாகோ தனது கல்லூரி காதலரும் சாமானியருமான கெய் கொமுரோவாவை திருமணம் செய்வதற்காக தனது அரச பட்டத்தை விட்டுக்கொடுத்தார். அன்பினால் மக்கள் தங்கள் வாழ்வில் விலைமதிப்பற்ற பொருட்களைக் கூட தியாகம் செய்ய முடியும் என்பதை இது காட்டுகிறது.
உண்மையான காதல் என்பது பொருள் உடைமைகள் அல்லது நிதி நிலையைப் பற்றியது அல்ல, மாறாக அன்பு மற்றும் ஒற்றுமை போன்ற அடிப்படை மனித தேவைகளைப் போற்றுவதாகும் என்பதற்கு சான்றாக ஏஞ்சலினின் கதை அமைந்துள்ளது.