கோயம்புத்தூர் கே.பி.ராமசாமி – சிறிய மில்லில் தொடங்கி இந்தியாவின் பணக்காரர் ஆனார்..!
கோவை: ஒரு தொழிலை ஆரம்பித்து படிப்படியாக எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இருக்கிறார் கோவையை சேர்ந்த ஒரு தொழிலதிபர். கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்திய பணக்காரர்கள் பட்டியலிலும் அவர் இடம் பிடித்தார். யார் அவர்? எப்படி இந்த நிலைக்கு உயர்ந்தார் என்பது குறித்து இந்த கட்டுரையில் காணலாம்..
கே.பி.ராமசாமி, கல்லியம்புதூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தவர். கல்லூரி படிப்பை முடித்த இவர் வேலைக்கு செல்லவில்லை, மாறாக தொழில் தொடங்கி பலருக்கு வேலை கொடுக்க வேண்டும் என இலக்கு கொண்டிருந்தார்.
வீட்டின் மூத்த மகன் என்பதால் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய சூழலில் தைரியமாக 1984ஆம் ஆண்டு பவர்லூம் துறையில் கால்பதித்தார். நான்கு விசைத்தறி இயந்திரங்களுடன் கே.பி.ஆர் மில்ஸ் தொடங்கப்பட்டது. நூல், துணி, ஆடைகள் என அடுத்தடுத்து தொழிலை விரிவுபடுத்தினார்.
தற்போது கேபிஆர் மில்ஸ் ஓராண்டுக்கு சுமார் 15 கோடி ஆடைகளை உற்பத்தி செய்கிறது. 2019இல் ஃபாஸோ என்ற ஆண்கள் உள்ளாடை பிராண்டையும் அறிமுகம் செய்தது. கே.பி.ஆர் மில்ஸிலிருந்து அனைத்து விதமான ஆடைகளும் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பிரபல ஆடை விற்பனை நிறுவனங்களான ஹெச் & எம், மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் மற்றும் வால்மார்ட் ஆகியவற்றில் கே.பி.ஆர் மில்ஸின் ஆடைகள் விற்பனை ஆகின்றன. ஆடை மட்டுமின்றி 2013ஆம் ஆண்டில் சர்க்கரை ஆலையையும் தொடங்கி வெற்றி கண்டார் கே.பி.ராமசாமி. தற்போது கேபிஆர் குழும நிறுவனங்கள் ஆண்டுக்கு 6,000 கோடி வருவாய் ஈட்டுகின்றன.
15 ஆலைகளில் ஆடைகளை தயாரித்து அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது கேபிஆர் குழுமம். ஆர்டர்களை சரியான நேரத்தில் ஒப்படைப்பது தான் இவர்களின் தனித்துவம். ஓர் ஆர்டரை பெற்றுவிட்டால் அதற்கென தனி குழு அமைத்து வேலை செய்யும் பாணி தான் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது.
கேபிஆர் குழுமத்தின் இந்த வெற்றிக்கு பணியாளர்கள் மிகப்பெரிய காரணம். இவர் தனது ஆலைகளில் பணிபுரிபவர்களுக்கு இலவசமாக கல்வி கற்று தந்து , அவர்களை 12ஆம் வகுப்பு வரை படிக்க செய்துள்ளார். குறிப்பாக பெண் பணியாளர்கள் 27,000 பேர் இவர் மூலம் 12ஆம் வகுப்பு பயின்று உயர் படிப்புகளுக்கும் சென்றுள்ளனர். எனவே அனைவரும் இவரை அன்புடன் அப்பா என்றே அழைக்கின்றனர்.
கே.பி.ஆர் தொழிலில் மட்டுமல்ல, கல்வி துறையிலும் கவனம் செலுத்துகிறார். கோவையில் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியை நிறுவி செயல்படுத்தி வருகிறார். அதே போல கேபிஆர் அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் சமூக சேவைகளை செய்து வருகிறார்.
தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வந்த உடனே நான் பெரிய முதலீடு செய்து அகலக்கால் வைக்கவில்லை, படிப்படியாக ஒவ்வொரு துறையையும் கற்று அதன் பின்னரே தொழில்களை விரிவுபடுத்தினேன், இதுவே வெற்றிக்கு முக்கிய காரணம் என்று இளைஞர்களுக்கு அட்வைஸ் தருகிறார் கே.பி.ராமசாமி. ஒரு தொழிலை அடிமட்டத்தில் இருந்து எப்படி தொடங்க வேண்டும்? தொடங்கி பின்னர் தொழிலை எப்படி விரிவுபடுத்த வேண்டும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.