ஹைட்ரஜன் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்.. எலக்ட்ரிக் கார் கதை மலையேற போகுது..!!
டாடா கமின்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் துணை நிறுவனமான டிசிபிஎல் ஜிஇஎஸ் நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கான ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாக கொண்டு இயங்கும் இன்டர்னல் கம்பஷன் இஞ்சினை தயாரிக்கும் புதிய ஆலையைத் தொடங்கியுள்ளது.
டாடா கம்மின்ஸ் நிறுவனம் ஒரு 50:50 டாடா மோட்டார்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கம்மின்ஸ் இன்க்கின் கூட்டு நிறுவனமாகும். கார்பனைசேஷனைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த ஆலையைத் தொடங்குவதற்கு இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளன.
ஹைட்ரஜன் சார்ந்த பவர்டிரைன் அமைப்புகளுடன் இந்திய வாகனச் சந்தையை மாற்றியமைக்கும் நோக்கத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியாகும். எதிர்காலத்தில் மாசு அல்லாத சரக்குப் போக்குவரத்து, மக்கள் போக்குவரத்தை ஏற்படுத்துவது தான் எங்களது நோக்கமாகும் என்று டாடா மோட்டார்ஸின் செயல் இயக்குநர் கிரிஷ் வாக் தெரிவித்தார்.
ஜாம்ஷெட்பூரில் அமைந்துள்ள இந்த ஆலை அதிசிறந்த தொழில்நுட்பத்தையும், கட்டமைப்பையும், டாடா மோட்டார்ஸ் மற்றும் கம்மின்ஸின் புதுமை யோசனையையும் கொண்டுள்ளது. தயாரிப்பில் சிறந்த திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வுடன் செயல்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் டாடா மோட்டார்ஸும் கம்மின்ஸும் 30 ஆண்டுகால பார்ட்னர்ஷிப்புடன் டாடா கம்மின்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகின்றன. எலக்ட்ரிக் வாகனத்தில் புரட்சி செய்த டாடா மோட்டார்ஸ் அடுத்தது ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் கார்களை தயாரிக்கும் பணியில் இறங்க உள்ளது.
2023 மார்ச்சில் டிசிபிஎல் ஜிஇஎஸ் நிறுவப்பட்டு குறைந்த மற்றும் ஜீரோ எமிஷன் புரபல்ஷன் டிசைன் மற்றும் மேம்பாட்டு தொழில்நுட்பத்தை வர்த்தக வாகனங்களுக்கு வழங்கும்.
இந்த சிறப்பு அம்சங்களால் கிரீன் ஹவுஸ் எமிஷன்கள், காற்றின் தரத்தை உயர்த்துதல், இந்தியாவின் ஜீரோ எமிஷன் திட்டங்களுக்கு வழிவகுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் சரியான தொழில்நுட்பத்தை வழங்குவதில் கம்மின்ஸ் எப்போதும் முன்னுரிமை அளிக்கும். உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் டெஸ்டினேஷன் ஜீரோ உத்தியை எட்டுவதற்கு முயற்சிப்போம் என்று இந்தியாவின் கம்மின்ஸ் குரூப் நிர்வாக இயக்குநர் அஷ்வத் ராம் கூறினார்.
இதனிடையே தில்லி அருகே டாடா மோட்டார்ஸ் தனது ஐந்தாவது வாகன ஸ்கிராப்பிங் ஆலையை தொடங்கியுள்ளது. ஆண்டுக்கு 18,000 வாகனங்கள் இந்த ஆலையில் பிரித்தெடுக்கப்படும். இதன் மூலம் வாகனங்களை பொறுப்பாகப் பிரித்தெடுக்கவும், பிரிக்கப்பட்ட பாகங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் முடியும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.