பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர திட்டம்..?
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே தமிழகத்திற்கு படையெடுப்பதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டிருந்தார். அதாவது 5 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அப்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார். ரோடு ஷோவிலும் பங்கேற்றார். பிரதமரின் இந்த பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். அதாவது, வெள்ளம்-புயல் பாதிப்பின் போது ஒரு முறை கூட எட்டிப்பார்க்கவில்லை. தேர்தல் வருகிறது என்று தெரிந்து அடிக்கடி வருகிறாரே என்று விமர்சனங்களை முன்வைத்தனர். எத்தனை தடவை தமிழகத்திற்கு வந்தாலும் பாஜவால் தமிழகத்தில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவித்து அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர திட்டமிட்டுள்ளார். அவர் 3 தடவை தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டெல்டா பகுதிகள் மற்றும் வேலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது போக ஒன்றிய அமைச்சர்கள் 18 பேர் தமிழகம் முழுவதும் வந்து பிரசாரம் செய்ய உள்ளனர். அதாவது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், வி.கே.சிங், கிஷன்ரெட்டி, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 18 பேர் வர உள்ளனர். மேலும் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் தமிழகத்தில் பிரசாரத்திற்காக வர உள்ளார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை, கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு பிரதமர் முதல் ஒன்றிய அமைச்சர்கள் வரை வரிந்து கட்டி வருவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது._