இன்று தூத்துக்குடி செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்..!

மக்களவை தேர்தலுக்கான பரப்புரை தமிழ்நாடு முழுவதும் களைகட்ட தொடங்கியிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 22-ம் தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.அதேபோல், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவவுள்ளதால் தேர்தல் களம் திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு சுவாரசியம் பெற்றுள்ளது.அதிமுக கூட்டணியில் தேமுதிக, புரட்சி பாரதம், புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக மேற்கொண்டுள்ளனர்.அதேபோல் பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணி கட்சிகளும் தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான ’இண்டியா’ கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, கொ.ம.தே.க, ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளது.அதில், காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நேற்று அறிவித்தது.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் கையெழுத்தான பிறகும், உட்கட்சி தகராறு காரணமாக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மக்களவை தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரிக்கவுள்ளார்.

குமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் மீண்டும் போட்டியிடுகிறார். நெல்லையில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று வரை அறிவிக்கப்படாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் யாரை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கவுள்ளார் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்று விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் நாங்குநேரி சென்று அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தை மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்காக மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். நாங்குநேரி பொதுக்கூட்டத்தை முடித்ததும் 26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

தொடர்ச்சியாக அடுத்த மாதம் 17-ம் தேதி வரை ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்துக்கு அடுத்த மாதம் 7-ம் தேதி சென்று பிரச்சாரம் செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *