சிவாஜியின் சிவகாமியின் செல்வன் மறுவெளியீடு… அதகளமான ஆல்பர்ட் திரையரங்கு
50 வருடங்களுக்கு முன், 1974, ஜனவரி 26 ம் தேதி சிவாஜியின் சிவகாமியின் செல்வன் வெளியானது. எம்ஜி ராமச்சந்திரனின் பேவரைட் நடிகைகளில் ஒருவரான லதா, சிவாஜியுடன் இணைந்து நடித்த ஒரே படம் என்ற என்ற அடையாளமும் இதற்கு உண்டு.
1969 ல் இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆராதனா படத்தின் ரீமேக், சிவகாமியின் செல்வன். அப்பா, மகன் என இரு வேடங்களில் சிவாஜி நடித்திருந்தார். அப்பாவுக்கு ஜோடி வாணிஸ்ரீ, மகனுக்கு லதா. ஏவிஎம் ராஜன், எஸ்.வி.ரங்கா ராவ், எஸ்.வி.சகஸ்ரநாமம், டி.கே.பகவதி, எம்.என்.ராஜம், ஆர்.எஸ்.மனோகர் உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
கடந்த 50 வருடங்களில் பலமுறை இப்படம் மறுவெளியீடு கண்டிருக்கிறது. புதிய படங்களுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், வசந்த மாளிகைப் போன்ற பழைய படங்களை சென்னை ஆல்பர்ட் திரையரங்கு திரையிட்டு வருகிறது. வார இறுதியில் இந்தப் படங்கள் ஹவுஸ்ஃபுல்லாகி வருகின்றன.
சிவகாமியின் செல்வன் படத்தின் ஞாயிறு மாலை காட்சிக்கு குவிந்த சிவாஜி ரசிகர்கள், அவரது படத்துக்கு மாலை அணிவித்து, சூடம்காட்டி வழிபட்டதுடன், ஆரவாரத்துடன் படத்தை கண்டுகளித்தனர். ஞாயிறு மாலைக்காட்சி ஆல்பர்ட் திரையரங்கில் ஹவுஸ்ஃபுல்லானது. 50 வருடங்களுக்கு முன் வெளியான படம் இன்றும் வெளியாகி அரங்கு நிறைவது ஆச்சரியமான நிகழ்வு.