பேடிஎம் உயர் அதிகாரி பிரவீன் சர்மா திடீர் ராஜினாமா.. என்ன காரணம்..?
பேடிஎம் நிறுவனத்தின் சீனியர் வைஸ் பிரசிடென்டாகப் பணியாற்றி வந்த பிரவீன் சர்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதை பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் உறுதி செய்துள்ளது.
இதேவேளையில் பேடிஎம் தனது நிறுவனத்தில் 20 முதல் 40 சதவீதம் வரையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல் வெளியான நிலையில் இதை மறுத்துள்ளது.
பிரவீன் சர்மா தனது ராஜினாமா கடிதத்தில், தான் வேறு வாய்ப்புகளைத் தேடிப் போவதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். பேடிஎம்மில் பிரவீன் சர்மா சேர்வதற்கு முன்பாக கூகுளில் இந்தியா மற்றும் ஆசியா பசிபிக் பிராந்தியத்தின் பொறுப்பை வகிக்கும் மூத்த பதவியில் 9 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பேடிஎம் நிறுவன தலைவர் விஜய் சேகர் நிறுவனத்தின் சேவைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில் பிரவீன் சர்மாவின் ராஜினாமா நடைபெற்றுள்ளது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட்டின் போர்டில் இருந்து விஜய் சேகர் சர்மா விலகியுள்ளார். இதன் மூலம் போர்டு மீண்டும் புதிதாக உருவாக்கப்படும்.
பேடிஎம் நிறுவனத்தில் இருந்து 20 முதல் 25 சதவீத ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பற்றி கூறுகையில் இது ஆதாரமற்ற செய்தி என்று பேடிஎம் மறுத்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி தவறான செய்தி வெளியாகியுள்ளதாகவும் கூறியது.
இதனிடையே ஒன்97 கம்யூனிகேஷன்ஸின் பங்குகள் வெள்ளிக்கிழமையன்று ரூ.402.50க்கு வர்த்தகமானது. இது அதற்கு முந்தைய தினத்தைவிட 2.10 சதவீதம் குறைவாகும். கடந்த 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.998.30க்கும் குறைந்தபட்சமாக ரூ.318.35க்கும் இந்த பங்குகள் வர்த்தகமாகின.