போயிங் நிறுவனத்தின் சிஇஓ திடீர் ராஜினாமா.. கோளாறு நிறைந்த 737 MAX விமானம்..!!
அமெரிக்காவின் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தில் பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர் கதையாக உருவெடுத்து வருகின்றன. இந்த நிலையில், இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேவ் கால்ஹூன் பதவிக்காலம் முடிவதற்குள் பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது போயிங் நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், வர்த்தகத்தின் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.
கடந்த ஜனவரியில், அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 737 MAX விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட பழுது, போயிங் நிறுவனத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதுவே இந்த திடீர் மாற்றங்களுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர், கடந்த வாரம் போயிங் நிறுவனத்தின் வணிகர் விமானப் பிரிவின் தலைமை செயல் அதிகாரியான ஸ்டான் டீல் ஓய்வு பெற உள்ளார். அவரது இடத்தை ஸ்டெபானி போப் என்பவர் ஏற்க உள்ளார், தற்போது சிஇஓ டேவ் கால்ஹூன் ராஜினாமா செய்தி வந்துள்ளது.
மேலும், தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் மோலன் கோப்ஃப், போயிங் நிறுவனத்தின் நிர்வாக குழுவின் புதிய இயக்குநர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் புதிய தலைமை செயல் அதிகாரியைத் தேர்வு செய்வதற்கான பணிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட பழுது சம்பவம், போயிங் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு கொடுத்தது. இதற்கு முன்னதாக 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டு விபத்துக்களில் கிட்டத்தட்ட 350 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்களின் பின்னர் தான், கால்ஹூன் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால், தொடரும் பாதுகாப்பு பிரச்சனைகள், போயிங் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையைக் குறைத்துள்ளது. இந்த மாற்றங்கள் போதும் என முதலீட்டாளர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். போயிங் நிறுவனம் தனது பாதுகாப்பு பிரச்சனைகளை உடனடியாக களைய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.