இஸ்ரேல் – ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்த ஐ.நா தீர்மானம்
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது.
அமெரிக்கா வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தாலும், அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்கவேண்டும் என ஐ .நா கோரியுள்ளது.
போர் நிறுத்த வாக்கெடுப்பு
இந்தப் போரினால் பலஸ்தீன மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த அழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது நமது கடமையாகும் என்று அல்ஜீரியாவின் ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் அமர் பென்ட்ஜாமா வாக்கெடுப்புக்குப் பின்னர் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரினால் இஸ்ரேலிய நகரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து காசாவில் இஸ்ரேல் ஒரு பாரிய இராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஒரு இலட்சம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கடந்த ஐந்து மாதங்களில், போர் நிறுத்தம் என்ற வார்த்தையை அமெரிக்கா வெறுத்து, தமது தடை அதிகாரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளது.
இதேவேளை பாதுகாப்பு சபையின் இன்றைய போர் நிறுத்த தீர்மானத்துக்கு முன்னதாக, இஸ்ரேலிய இராணுவ வானொலியில் இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில் அமெரிக்கா போர் நிறுத்த தீர்மானத்தை தடை செய்யாவிட்டால் அமெரிக்காவுக்கு திட்டமிடப்பட்ட தூதுக்குழுவை நெத்தன்யாகு ரத்து செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.