மக்களுக்கு அடுத்த ஷாக்..! 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது..!

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதன் நுகர்வுக்கு ஏற்ப உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் பாராசிட்டமால், மார்பின், அட்ரினலின், சிட்ரிசின், பாம்பு விஷத்திற்கு எதிரான ஆன்டிசீரம், சல்புடமைன், சாலிசிலிக் அமிலம், ரேபிஸ் தடுப்பூசி, பிசிஜி, டிபிடி, ஹெபடைடிஸ் பி, ஜப்பான் காய்ச்சல், டெட்டனஸ் தடுப்பூசிகள், ஸ்டீராய்டுகள் மற்றும் பலவகையான மருந்துகளின் விலை அதிகரிக்கும். இந்த மருந்துகள் காய்ச்சல், ரத்த சோகை மற்றும் கோவிட் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும், விலைவாசி உயர்வால் தனியார் மருந்து நிறுவனங்களுக்கு பல கோடி லாபம் கிடைத்து வருகிறது. இந்நிலையில் அத்தியாவசிய மருந்துகளின் விலையை அதிகரிக்க ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் 10 மற்றும் 12 சதவீத விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. அதேபோல் இந்தாண்டும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்த, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டுகளை காட்டிலும் இம்முறை விலை உயர்வு சதவீதம் சற்று குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘பொதுவாக மக்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் என 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் வருடாந்திர மாற்றத்திற்கு ஏற்ப, அத்தியாவசிய மருந்துகளின் தேசியப் பட்டியலின் கீழ், அத்தியாவசிய மருந்துகளின் விலையை 0.0055% அதிகரிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களில், அதிகளவு மருந்து நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளன. அவற்றில் ரூ.52 கோடிக்கு பத்திரம் வாங்கிய அரபிந்தோ பார்மா நிறுவனம், மொத்த தேர்தல் பத்திரத்தில் பாதிக்கும் மேல் பாஜகவுக்கு வழங்கியுள்ளது. ஹெட்டோரோ டிரக்ஸ் லிமிடெட், எம்எஸ்என் பார்மா கம் பிரைவேட் லிமிடெட் மற்றும் நாட்கோ பார்மா லிமிடெட் போன்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இந்த பட்டியலில் உள்ளன. இருந்தன. ஒவ்வொரு ஆண்டும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதால், சில நிறுவனங்கள் தங்களது ஆண்டு வருவாயில் 12 முதல் 13 சதவீதம் வரை ஈடுட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *