பாரம்பரிய முறையில் விரால் மீன் குழம்பு… இப்படி ஒரு முறை செய்து பாருங்க…
பொதுவாகவே அசைவ உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் அது மீன் வகைதான். மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
மீன்களை பொரித்து சாப்பிடுவதை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. மீன்குழம்பு பல வகைகளிலும் செய்யலாம்.
அதிலும் விரால் மீன்கள் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. கடலில் கிடைக்கும் விரால் மீன்களை பார்க்கிலும் கிராமபுறங்களில் ஆறுகளில் கிடைக்கும் விரால் மீன்களுக்கு சுவை அதிகம்.
வீடே மணமணக்கும் வகையில் விரால் மீன் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவைப்படும் பொருட்கள்
விரால் மீன் – 1/4 கிலோ கிராம்
சின்ன வெங்காயம் – 15 – 20
தக்காளி – 2
துருவிய தேங்காய் – 1/4 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
பூண்டு – 10பல்
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
மிளகாய்த் தூள் – 1 1/2 தே.கரண்டி
கொத்தமல்லி தூள் – 2 தே.கரண்டி
சீரகம் – 1தே.கரண்டி
வெந்தயம் – 1/2 தே.கரண்டி
வறுத்துப் பொடித்த வெந்தயம் – 1 தே.கரண்டி
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலாவதாக விரால் மீனை நன்றாக சுத்தம் செய்து சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் ஒரு பாத்திரத்தில் புளியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்து கொள்ள வேண்டும்.
புளி நன்றாக ஊறியதும் அதனை கெட்டியாக பதத்தில் கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போன்ற பதத்தில் அரைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் மண் சட்டி ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு வெடிக்க விட வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக மாறும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி வதங்கியவுடன் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை போனதன் பின்னர் புளி கரைசலை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்த பிறகு கழுவி வைத்துள்ள விரால் மீன் துண்டுகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்டை அதனுடன் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவினால் சுவையான விரால் மீன் குழம்பு தயார்.