50% பணி நீக்கம் செய்ததா பேடிஎம் நிறுவனம்…உண்மை என்ன?
கடந்த சில மாதங்கள் ஆகவே பேடிஎம் நிறுவனத்திற்கு மிகவும் கஷ்ட காலம் என்று சொல்லலாம். ஏனென்றால் சமீபத்தில் தான் ரிசர்வ் வங்கியின் பிடியில் சிக்கிபல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. இதனை பயன்படுத்தி பல்வேறு வதந்திகளும் அந்நிறுவனத்தின் மீது பரப்பப்படுகிறது. One97 கம்யூனிகேஷன்ஸ் மூத்த நிர்வாகி அதாவது பேடிஎம் இன் தாய் நிறுவனத்தின் நிர்வாகி பிரவீன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் அவர் கூகுள் நிறுவனத்தின் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க, பேடிஎம் தொடர்பாக ஒரு வதந்தி பரப்பப்பட்டுள்ளது. அதாவது, பேடிஎம் நிறுவனத்தில் பணியாற்றுவோரை அதிகமான அளவில் பணிநீக்கம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. பேடிஎம் பணியாளர்கள் 25 முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து செய்திகளையும் பேடிஎம் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று பேடிஎம் தெளிவுபடுத்தியுள்ளது.
பேடிஎம் நிறுவனம் தற்போது அதன் வருடாந்திர மதிப்பீட்டு செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இது அணியின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வழக்கமான நடைமுறையாகும் என்று கூறப்பட்டுள்ளது. செயல்திறன் மதிப்பீடு மற்றும் பங்கு சீரமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன் மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் செயல்திறன் தொடர்பான சரிசெய்தல் ஆகியவை பணிநீக்கங்கள் என தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக பேடிஎம் நிறுவனம் மேலும் கூறியுள்ளது.