காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடி அலை வீசுகிறது : சுதாகர் ரெட்டி..!

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி , “நாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடி அலை வீசுகிறது. இதனால் மக்களவைத் தேர்தலில் 370 இடங்களில் உறுதியாக வெற்றி பெறுவோம். ஏனெனில், நாட்டின் 500 ஆண்டுகள் பிரச்சினையை தீர்த்து ராமர் கோயில் கட்டியது, 370 சிறப்பு சட்டத்தை நீக்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி உள்ளதால், தலைவராக மோடி வளர்ந்துள்ளார்.

பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் திராவிட மாடல் என சொல்லிக் கொள்ளும் திமுக அரசு அறிவித்த, 520 வாக்குறுதிகளில், 200 திட்டங்களை கூட செயல்படுத்தவில்லை. கடந்த 3 ஆண்டுகள் திமுக ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். திமுக அமைத்துள்ள இண்டியா கூட்டணி தலைவர்கள் ஜெயிலிலிருந்து பெயில், பெயிலிருந்து ஜெயில் என இருந்து வருகின்றனர்.

மோடி தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. அதனால்தான் வரும் தேர்தலில் தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமோக வெற்றி பெறவுள்ளோம். மக்கள் எங்களை உற்று நோக்கி, பாஜக பக்கம் வந்துள்ளனர். நமக்கு பலமான தலைவர் வேண்டும் என்கிற நோக்கில் மோடியை தேர்வு செய்துள்ளனர்.

தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரியில் பல்வேறு திட்டங்கள் வரும் காலத்தில் பாஜக அரசு செயல்படுத்தவுள்ளது. கிருஷ்ணகிரி ரயில் திட்டம், ஓசூர் மெட்ரோ திட்டத்துடன் காவிரி நதிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும். அதேபோல மாங்கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும். இங்கு ஓரிரு முதலாளித்துவ நபர்களால் மா விவசாயிகள், மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்த பிரச்சினைகள் அனைத்து வரும் காலங்களில் சரிசெய்யப்படும். அதை பாஜக அரசால் மட்டுமே செய்ய முடியும்.

தமிழ் கலாச்சாரம், மக்களின் பெருமையை பிரதமர் மோடி உலகளவில் பரப்பி வருகிறார். அவரது தமிழக வருகையை பார்த்து திமுகவினர் அச்சமடைந்துள்ளனர். மோடியின் வளர்ச்சியை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய பாஜக அரசு வரும் காலங்களில் நிறைவேற்றும்.

எங்களுடன் கூட்டணியில் இருந்து, நான்கரை ஆண்டு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள், தற்போது எங்களிடமிருந்து பிரிந்துள்ளனர். ஆனால், பொதுமக்கள்தான் எஜமானர்கள். தமிழகத்துக்கு யார் தேவை என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். திராவிட கட்சிகளுக்குள்தான் போட்டி என்பதை ஏற்க முடியாது. தேர்தல் முடிவுகள்தான் அதை சொல்லும்.

தமிழகத்தில் பிரதமர் வீடு, குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றுடன் யாரும் செய்யாத வகையில் மீனவர் நலனுக்காக, ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கியவர் பிரதமர் மோடி. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

தமிழக அமைச்சர் உதயநிதி இந்திய அரசியலைமைப்பு சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்குள்ளான உறவு குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். சனாதன தர்மம் குறித்து மக்களிடையை வெறுப்புணர்வை தூண்டி, வாக்குகளை பெற நினைக்கிறார்.

ரயில்வே, விமான போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை உள்ளிட்டவைகள் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும், மாநிலங்களுக்கு திட்டங்களை பாரபட்சம் இல்லாமல் விரிவு படுத்துகிறது. இது போல பாஜக-வுக்கு எதிராக திமுக செய்யும் பிரசாரங்கள் எடுபடாது. தேர்தலுக்கு பின் பாஜக மத்தியில் மீண்டும் வலுவான ஆட்சி அமைக்கும்” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *