தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அதிமுக – பாஜக மாவட்ட செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு..!
நீலகிரி தனி தொகுதியில் மத்திய அமைச்சர் முருகன் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இங்கு அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்காக முதலில் பாஜகவினர் ஊர்வலமாக வந்தனர். அந்த ஊர்வலத்தில் மத்திய அமைச்சர் எல் முருகன், அண்ணாமலை ஆகியோர் வந்தனர். இதற்கு முன்பாக எல். முருகன் வேட்புமனு தாக்கல் செய்ய 11 மணி முதல் 12 மணி வரை நேரம் ஒதுக்கித் தர கேட்டிருந்தார். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று அதிமுக வேட்பாளருக்கும் அதற்கு அடுத்தாற்போல் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் எல். முருகனும், பாஜக நிர்வாகிகளும் கோவில்களுக்குச் சென்றுவிட்டு தாமதமாக 12 மணிக்கு உதகை ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளனர்.
இதற்கிடையே அதிமுகவினரும் வேட்பாளருடன் அங்கு வந்த நிலையில், பாஜகவினர் ஊர்வலத்தை கடந்து செல்ல முயன்றதால் போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இரு கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தேர்தல் பரப்புரை ஊர்வலம் செல்ல அனுமதிக்கவில்லை எனக் கூறி காவல்துறையினரின் தடுப்பை மீறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தையும் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.